வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்காதது ஏன்? சிவசேனா கேள்வி

வீர சாவர்க்கருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்காதது ஏன்? என்று பாரதீய ஜனதாவை சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.
வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்காதது ஏன்? சிவசேனா கேள்வி
Published on

மும்பை,

மராட்டியத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கர் நினைவுநாளையொட்டி, அவரை வாழ்த்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என நேற்றுமுன்தினம் பாரதீய ஜனதா உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஆனால் அவர்களது கோரிக்கையை சபாநாயகர் நானா பட்டேலே நிராகரித்தார். இதனால் சபையில் அமளி உண்டானது.

இந்த பிரச்சினை தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா வின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

வீர சாவர்க்கர் பிரச்சினையில் மராட்டிய பாரதீய ஜனதா தலைவர்கள் மாநில அரசை விமர்சிப்போம் என அறிவித்து உள்ளனர். இது பாரதீய ஜனதாவுக்கு ஒரு அரசியல் பிரச்சினை. அவர்களுக்கு வீர சாவர்க்கர் மீது மரியாதை இல்லை. வீர சாவர்க்கர் வெறுமனே ஒரு விவாதப் பொருள் அல்ல. அவரது வாழ்க்கை போராட்டம், தியாகம், கொள்கைகளை குறிப்பிடுகிறது.

பாரத ரத்னா விருது

மத்திய பாரதீய ஜனதா அரசு வீர சாவர்க்கரை கவுரவித்ததா என மராட்டிய பாரதீய ஜனதா தலைவர்கள் கேட்க வேண்டும்.

குடியரசு தினத்தன்று ஏன் மத்திய அரசு சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கவில்லை. அதுபற்றி பாரதீய ஜனதாவினர் பேசுவார்களா?

சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டி தேவேந்திர பட்னாவிஸ் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிய கடிதங்கள் என்ன ஆனது. அந்த கடிதங்களை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. இது மராட்டியம் மற்றும் வீர சாவர்க்கரை அவமதிப்பதாகும்.

அந்தமான் சிறையில் இருந்து விடுதலையான பிறகு, சாவர்க்கர் தனது வாழ்க்கையை ரத்னகிரியில் சமூகப் பணிகளுக்காக அர்ப்பணித்தார். மகாத்மா காந்தி மற்றும் ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெட்கேவர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அவரை சந்தித்தனர். தீண்டாமையை ஒழிப்பதற்கும், சுதேசியை பரப்புவதற்கும் அவரது ஒத்துழைப்பை காந்தி கோரினார்.

போலி அன்பு

சுதந்திரப் போராட்டத்தில் சாவர்க்கருக்கு பெரும் பங்களிப்பு இருந்தது. அந்த நேரத்தில் பாரதீய ஜனதா, அப்போதைய சங் பரிவார் எங்கே இருந்தது? ஆர்.எஸ்.எஸ். தேசிய கொடியை கூட அங்கீகரிக்கவில்லை. சர்தார் வல்லபாய் பட்டேல் 2 முறை ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை விதித்தார். 2 தடவையும் தடையை நீக்கியபோது, மூவர்ணத்தை தேசிய கொடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தார். தங்களை தேசியவாதி என்று அழைக்கும் அமைப்புகள் 2002-ம் ஆண்டு வரை மூவர்ணத்தை தேசிய கொடியாக ஏற்க தயாராக இல்லை.

காவி கொடியும் சிவசேனாவின் அடையாளமாகும். ஆனால் அந்த கொடியுடன் மூவர்ண கொடியும் ஏற்றப்படுகிறது. இது தான் எங்கள் தேசியவாதம். சாவர்க்கரை ஒரு கேடயமாக பயன்படுத்துவதன் மூலம் புதிய தேசியவாத அரசியலை பாரதீய ஜனதா விளையாடுகிறது. சாவர்க்கர் மீதான பாரதீய ஜனதாவின் அன்பு போலியானது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com