தடை அமலில் இருக்கும் போது குடிமராமத்து பணியில் சவடு மண் எடுக்கலாம் என அறிவித்தது ஏன்? மதுரை ஐகோர்ட்டு கேள்வி

குடிமராமத்து பணியில் சவடு மண் எடுக்கலாம் என அறிவித்தது ஏன்? என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
தடை அமலில் இருக்கும் போது குடிமராமத்து பணியில் சவடு மண் எடுக்கலாம் என அறிவித்தது ஏன்? மதுரை ஐகோர்ட்டு கேள்வி
Published on

மதுரை,

மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த காளிதாஸ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் பொது மக்களின் துணையோடு குடிமராமத்து பணியை மேற்கொள்ள தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நீர்நிலைகளிலிருந்து களிமண், வண்டல் மண், சவடு மண் ஆகியவற்றை விவசாயிகளும், மண்பாண்டம் செய்வோரும் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மதுரை ஐகோர்ட்டு வரம்புக்கு உட்பட்ட 13 மாவட்டங்களில் சவடு மண் எடுக்க தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் அதனை கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு சவடு மண்ணை எடுக்க அனுமதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பை சட்ட விரோதமானது என அறிவித்து ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், அது செய்தி குறிப்பாக தான் வெளியிடப்பட்டுள்ளது. விவசாய பணிக்காகவும் மண்பாண்டங்களை செய்யவும் வண்டல்மண், களிமண் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், 13 மாவட்டங்களில் சவடு மண் எடுக்க மதுரை ஐகோர்ட்டு தடை விதித்துள்ள நிலையில், எவ்வாறு அதையும் குறிப்பிட்டு செய்திக்குறிப்பு வெளியிட்டீர்கள்? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு வக்கீல், அவை நீங்கலாகவே அந்த செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பதில் மனுவை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என தெரிவித்தார்.

விசாரணை முடிவில், இதுகுறித்தும் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 3-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com