கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை
Published on

கடலூர்,

வங்க கடலில் வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது.ஏற்கனவே நிவர், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தற்போது பெய்து வரும் மழையால் மேலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே நெற்பயிர்களில் தண்ணீர் தேங்கி வடிந்த நிலையில், தற்போது பெய்து வரும் தொடர் மழையால் வயல்களில் மீண்டும் தண்ணீர் தேங்க தொடங்கி உள்ளது. அதை விவசாயிகள் வடிய வைத்து வருகின்றனர்.

சாலைகள் சேதம்

அதேபோல் தாழ்வான குடியிருப்பு பகுதிகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் கடலூரில் நேற்று காலை முதல் மிதமான மற்றும் அவ்வப்போது கன மழைக்கும் 70 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று அதிகாலை முதல் விட்டு, விட்டு மழை பெய்தது. சில நேரங்களில் கன மழையாகவும், சில நேரம் மிதமான மழையாகவும் பெய்தது. இந்த மழை மாலை வரை நீடித்தது.

மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. அதேபோல் தொடர் மழையால் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறி வருகிறது. கடலூர் நகரில் உள்ள பிரதான சாலைகள் அனைத்தும் ஜல்லிகள் பெயர்ந்து மிக மோசமாக காட்சி அளித்து வருகிறது. ஏற்கனவே புதை வட மின் கேபிள் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரி வர மூடாததாலும், மழையாலும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி சாலை போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

குட்டை போல்...

நீதிபதிகள் குடியிருப்பு சாலை, கிளை சிறைச்சாலை ரோடு, வேணுகோபாலபுரம் ரோடு, புதுப்பாளையம் போன்ற பல்வேறு சாலைகள் சேதமடைந்து உள்ளது. நேதாஜிரோடு ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளதால், கார், வேன், ஆட்டோக்கள் கிளைச்சிறைச்சாலை வழியாக வந்து, தெற்கு கவரைத்தெரு வழியாக நேதாஜி ரோடு செல்கிறது. இதனால் அந்த சாலை முழுவதும் சேதமடைந்து பெரிய, பெரிய பள்ளமாக உள்ளது. அதில் தண்ணீர் தேங்கி குட்டை போல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

மேலும் இந்த மழையால் தென்பெண்ணையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள கும்தாமேடு தடுப்பணை பாலத்தின் மேல் தண்ணீர் சீறி பாய்ந்து செல்கிறது.

மழை அளவு

இதேபோல் சிதம்பரம், பரங்கிப்பேட்டை, பண்ருட்டி, வடலூர், ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இருப்பினும் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 24.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

கடலூர் கலெக்டர் அலுவலகம் -16.2, பரங்கிப்பேட்டை- 15.6, அண்ணாமலைநகர்-11.2, குடிதாங்கி-11, வானமாதேவி -7, பண்ருட்டி-3, காட்டுமன்னார்கோவில்-2.2, புவனகிரி, சிதம்பரம், கொத்தவாச்சேரி, குறிஞ்சிப்பாடி, லால்பேட்டை, பெலாந்துறை தலா 1.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com