திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. நிலக்கோட்டை அருகே மின்கம்பம் சாய்ந்து வீடு சேதமடைந்தது.
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை
Published on

பழனி:

பரவலாக மழை

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். அதேபோல் நேற்றும் மாவட்டத்தில் காலை முதல் மதியம் வரை வெயில் சுட்டெரித்தது.

இதற்கிடையே மாலை 4 மணி அளவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கருமேகங்கள் திரண்டு மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. அதன்பிறகு சிறிது நேரத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழையும், ஒருசில பகுதிகளில் சாரல் மழையும் பெய்தது.

அதன்படி, பழனியில் சுமார் 1 மணி நேரம் பலத்த பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளமென கரைபுரண்டு ஓடியது.

சாலையில் சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மழையில் நனையாமல் இருக்க குடை பிடித்தபடி சென்றனர். பழனி பகுதியில் திடீரென்று பெய்த இந்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

வீடு சேதம்

இதேபோல் நிலக்கோட்டை, நத்தம், சின்னாளப்பட்டி, திண்டுக்கல், கொடைக்கானல், ஒட்டன்சத்திரம் உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியது.

நிலக்கோட்டை அருகே முத்தாலபுரத்தில் மழையுடன் வீசிய பலத்த காற்றால், அதே கிராமத்தை சேர்ந்த அழகர்சாமி மனைவி முத்துப்பிள்ளை என்பவரது வீட்டின் மீது அருகில் இருந்த மின்கம்பம் திடீரென்று சாய்ந்தது. இதில் அந்த வீடு சேதமடைந்தது.

அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் அழகர்சாமி குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதுகுறித்து தகவலறிந்த விளாம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீடு சேதம் குறித்து பார்வையிட்டனர். மேலும் மின்வாரிய ஊழியர்கள் அங்கு வந்து மின்கம்பத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com