மாவட்டத்தில் பரவலாக மழை வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது; சுவர்கள் இடிந்தன

திருச்சி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சுவர்கள் இடிந்தன.
மாவட்டத்தில் பரவலாக மழை வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது; சுவர்கள் இடிந்தன
Published on

மணப்பாறை,

திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வந்ததால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இந்நிலையில் மணப்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 மாதமாக அவ்வப்போது மழை பெய்ததால் ஓரளவு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வந்தது. தற்போது கடந்த 3 நாட்களாக அடை மழை பெய்து வருவதால், நிலத்தடி நீர்மட்டம் மேலும் உயர தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாக வறண்டு கிடந்த நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது.

பல ஆண்டுகளாக வறண்டு கிடந்த குட்டைகளிலும் மழைநீர் தேங்கியது. அதில், மீன்களும் உள்ளதால் சிலர் தூண்டில் போட்டு மீன்பிடித்து வருகின்றனர்.

சுவர்கள் இடிந்தன

திருவெறும்பூர் அருகே அசூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொய்கைக்குடியில் கட்டளை வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் மூலம், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த வாய்க்கால் தூர்வாரப்படாததால் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக வாய்க்காலில் உள்ள தடுப்புச்சுவரில் உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. மழைநீர் புகுந்த ஒரு வீட்டின் மேற்கூரை திடீரென சரிந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. மழைநீர் ஊருக்குள் வருவதை தடுப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர் மழையின் காரணமாக திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் வடக்கு தெருவை சேர்ந்த மரகதத்தம்மாள்(வயது 49) என்பவருடைய வீட்டின் மண் சுவர்கள் இடிந்து விழுந்தன. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து தகவல் அறிந்த வேங்கூர் கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு அரசின் உதவிகள் கிடைக்க பரிந்துரை செய்யப்படும் என்று கூறினார்.

முசிறி

முசிறியை அடுத்த அய்யம்பாளையம் குடித்தெருவை சேர்ந்தவர் கருப்பண்ணன்(60). தொடர் மழையின் காரணமாக இவரது குடிசையின் சுவர்கள் இடிந்து விழுந்தன. அவருக்கு, முசிறி தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் வருவாய் துறையினர் நிவாரண உதவிகளை வழங்கினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com