பந்தலூர் அருகே போலீஸ் துணை சூப்பிரண்டு வாகனத்தை தாக்கிய காட்டு யானை

தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு வாகனத்தை நள்ளிரவில் காட்டு யானை தாக்கியது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
பந்தலூர் அருகே போலீஸ் துணை சூப்பிரண்டு வாகனத்தை தாக்கிய காட்டு யானை
Published on

பந்தலூர்,

பந்தலூர் தாலுகா நெலாக்கோட்டை பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு சக்திவேல் வாகனத்தில் ரோந்து சென்றார். வாகனத்தை போலீஸ் ஏட்டு கிருஷ்ணமூர்த்தி ஓட்டினார். அவர்கள் நெலாக்கோட்டையில் இருந்து கரியசோலை வழியாக தேவாலாவுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது நெலாக்கோட்டை ஊராட்சி மன்றம் அலுவலகம் அருகே மறைந்து இருந்த ஒரு காட்டு யானை திடீரென போலீஸ் துணை சூப்பிரண்டு வாகனத்தை நோக்கி ஓடி வந்தது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் தந்தத்தால் போலீஸ் ஏட்டு கிருஷ்ணமூர்த்தி அமர்ந்து இருந்த இருக்கை அருகே தாக்கியது.

இதில் போலீஸ் வாகனம் சேதம் அடைந்தது. இருப்பினும் வாகனத்தை நிறுத்தாமல் ஏட்டு கிருஷ்ணமூர்த்தி வேகமாக ஓட்டினார். ஆனாலும் காட்டு யானை ஆவேசத்துடன் சிறிது தூரம் வாகனத்தை துரத்தியவாறு பின்னால் ஓடி வந்தது.

இதனால் போலீஸ் துணை சூப்பிரண்டு சக்திவேல், ஏட்டு கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் காட்டு யானையிடம் சிக்காமல் உயிர் தப்பினர். அதன்பின்னர் காட்டு யானை வந்த வழியாக திரும்பி சென்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நள்ளிரவு காட்டு யானை நடமாட்டம் இருப்பதால் அப்பகுதி மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com