3 பேரை பலி கொண்ட காட்டு யானை, மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்டது

ஓசூர் அருகே 3 விவசாயிகளை கொன்ற காட்டு யானையை, வனத்துறையினர் நீண்ட நேரமாக போராடி மயக்க ஊசி போட்டு நேற்று பிடித்தனர்.
3 பேரை பலி கொண்ட காட்டு யானை, மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்டது
Published on

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனப்பகுதியில் இருந்து பிரிந்து வந்த 18 வயதுடைய ஒரு ஆண் யானை கடந்த சில நாட்களாக சூளகிரி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. அந்த யானையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி சின்னாறு அருகே பந்தரகுட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜப்பா (வயது 60) என்பவரை யானை தாக்கி கொன்றது. அவரது உடலை எடுக்க சென்ற ரங்கநாதன், முனிகிருஷ்ணன் ஆகிய 2 பேரையும் யானை தூக்கி வீசியது. இதில் அவர்கள் காயம் அடைந்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் சூளகிரி அருகே தேவர்குட்டப்பள்ளி என்னும் கிராமத்திற்குள் சென்ற யானை அங்கு முனிராஜ் (60) என்ற விவசாயியை தூக்கி வீசி தந்தத்தால் குத்தி கொன்றது. இதில் யானையின் தந்தமும் உடைந்தது. தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்த யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்க வனத்துறையினர் நேற்று முன்தினம் நடவடிக்கையில் இறங்கினார்கள். ஆனால் நேற்று முன்தினம் முழுவதும் தேடியும் அந்த காட்டு யானை கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை சூளகிரி அருகே ஒட்டையனூரைச் சேர்ந்த தேவன் (50) என்ற விவசாயி அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காட்டு யானை தேவனை துதிக்கையால் தூக்கி வீசி கொன்றது. இதன்பிறகு அந்த காட்டு யானை, ஒட்டையனூரில் உள்ள கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையையொட்டி சுற்றி திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக மண்டல வனபாதுகாவலர் உலகநாதன், மாவட்ட வனஅலுவலர் தீபக் பில்கி ஆகியோர் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறையினர், வேட்டை தடுப்பு குழுவினர் அங்கு சென்றனர். அவர்களுடன் யானைக்கு மயக்க ஊசி செலுத்துவதில் சிறப்பு பயிற்சி பெற்ற கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா கால்நடை டாக்டர் அருண்ஷா தலைமையிலான மருத்துவ குழுவினர் மயக்க ஊசி பொருத்தப்பட்ட துப்பாக்கியுடன் சென்றார்கள்.

இதைத்தொடர்ந்து சரியாக காலை 9.20 மணிக்கு துப்பாக்கியில் பொருத்தப்பட்ட மயக்க ஊசி மூலமாக யானை மீது சுடப்பட்டது. இந்த ஊசி யானையின் உடலில் பட்டு மருந்து உள்ளே இறங்கியதும் யானை சிறிது தூரம் ஓடியது. பின்னர் யானை அப்படியே நின்றது. இதைத் தொடர்ந்து சரியாக காலை 11.30 மணிக்கு 2-வது முறையாக மயக்க ஊசி பொருத்தப்பட்ட துப்பாக்கி மூலம் யானை மீது சுடப்பட்டது. இந்த மயக்க மருந்தும் யானையின் உடலில் இறங்கியது.

2 மயக்க ஊசி உடலில் செலுத்தப்பட்டதால் ஆக்ரோஷம் குறைந்த யானை அதிகம் ஓடாமல் அதே இடத்தில் நின்றது. இந்த நிலையில் யானை மயக்கம் அடைந்து விட்டது என எண்ணி வனத்துறையினர் அருகில் சென்றார்கள். அப்போது திடீரென்று யானை திரும்பி ஓடி வந்தது. இதைக் கண்டு வனத்துறையினர் அங்கிருந்து ஓடி உயிர் தப்பினார்கள். பின்னர் பிற்பகல் 1 மணி அளவில் 3-வது மயக்க ஊசி செலுத்தப்பட்டது. 3 மயக்க ஊசி போடப்பட்டதால் யானை மயக்கம் அடைந்தது.

இதன் பின்னர் யானையை ஏற்றுவதற்காக வனத்துறையினரின் பிரத்யேக லாரி அங்கு கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து கயிற்றால் யானையின் உடல் கட்டப்பட்டு லாரியில் ஏற்ற வசதியாக சாய்தளம் வைக்கப்பட்டது. வனத்துறையினர் லாரியின் மேலே இருந்து இழுத்தும், கீழே இருந்து தள்ளியபடியும் யானையை லாரிக்குள் ஏற்றினார்கள். நேற்று மதியம் 2.20 மணிக்கு யானை லாரியில் ஏற்றப்பட்டது.

காட்டு யானை பிடிபட்ட தகவல் அறிந்ததும் எம்.எல்.ஏ.க்கள் தளி ஒய்.பிரகாஷ், வேப்பனப்பள்ளி பி.முருகன் ஆகியோர் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் யானை தாக்கி பலியான தேவன் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்கள்.

இந்த நிலையில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தர்மபுரி மாவட்டத்திற்கு வந்தார். அவர் ஒகேனக்கல்லில் கலெக்டர் விவேகானந்தன் மற்றும் அதிகாரிகளுடன் யானையை, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை அடுத்த பிலிகுண்டுலு வனப்பகுதியில் விடுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், பிடிபட்ட காட்டு யானையை பிலிகுண்டுலு வனப்பகுதியில் விட முடிவு செய்யப் பட்டது.

3 பேரை பலி கொண்ட காட்டு யானையை நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் பிடித்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com