கால்வாய்க்குள் இறங்கி வெளியேற முடியாமல் சிக்கி தவித்த காட்டுயானைகள்

கிராம மக்கள் பட்டாசுகள் வெடித்து விரட்ட முயன்றதால் கால்வாய்க்குள் இறங்கிய காட்டுயானைகள் அதிலிருந்து வெளியேற முடியாமல் சிக்கி தவித்த சம்பவம் உன்சூர் தாலுகாவில் நடந்துள்ளது.
கால்வாய்க்குள் இறங்கி வெளியேற முடியாமல் சிக்கி தவித்த காட்டுயானைகள்
Published on

மைசூரு:கிராம மக்கள் பட்டாசுகள் வெடித்து விரட்ட முயன்றதால் கால்வாய்க்குள் இறங்கிய காட்டுயானைகள் அதிலிருந்து வெளியேற முடியாமல் சிக்கி தவித்த சம்பவம் உன்சூர் தாலுகாவில் நடந்துள்ளது.

காட்டுயானைகள்

மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகாவில் நாகரஒலே வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டுயானைகள், புலிகள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வெளியேறி அருகே உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. அதேபோல் நேற்றும் 5 காட்டுயானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறின.

அவைகள் வனப்பகுதியையொட்டிய நெல்லூர்பாலம் கிராமத்திற்குள் புகுந்து உணவு மற்றும் தண்ணீரை தேடி அலைந்து அட்டகாசம் செய்தன. இதனால் பீதி அடைந்த கிராம மக்கள் பட்டாசுகளை வெடித்து காட்டுயானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

கால்வாய்க்குள் இறங்கின

அப்போது காட்டுயானைகள் கிராமத்தையொட்டி ஓடும் காவிரி ஆற்றின் கால்வாயில் இறங்கின. அங்கு சிறிது நேரம் தண்ணீர் குடித்தும், விளையாடியும் மகிழ்ந்த காட்டுயானைகள் அதன்பின் கால்வாயில் இருந்து வெளியே வர முடியாமல் சிக்கி தவித்தன. இதைப்பார்த்த கிராம மக்கள் அங்கு திரண்டு பயங்கரமாக சத்தம் போட்டனர். இதனால் காட்டுயானைகள் ஆக்ரோஷம் அடைந்தன.

இந்த நிலையில் இதுபற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு வந்து கிராம மக்களை சத்தம்போடக்கூடாது என்று கேட்டுக் கொண்டனர். பின்னர் அவர்கள் காட்டுயானைகளை கால்வாயில் இருந்து மெதுவாக ஏற்றிவிட்டனர்.

பரபரப்பு

அதையடுத்து காட்டுயானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. இந்த சம்பவம் நேற்று அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com