தேயிலை தோட்டங்களில் காட்டுயானைகள் முகாம் - இலைபறிக்கும் பணி பாதிப்பு

தேயிலை தோட்டங்களில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் இலை பறிக்கும் பணி பாதிப்படைந்துள்ளது.
தேயிலை தோட்டங்களில் காட்டுயானைகள் முகாம் - இலைபறிக்கும் பணி பாதிப்பு
Published on

வால்பாறை,

வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழைக்கு பிறகு வடகிழக்கு பருவமழை போதியளவு பெய்யவில்லை. இந்த நிலையில் தற்போது இரவு நேரத்தில் குளிரும், பகல் நேரத்தில் அதிக வெப்பமும் நிலவி வருகிறது. இதனால் காட்டுயானைகள் தண்ணீருக்காக வனப்பகுதியை விட்டு வெளியேறுகின்றன. அவ்வாறு வருகின்ற யானைகள் தேயிலை தோட்டங்கள் வழியாக, வேறு வனப்பகுதிகளுக்கு செல்கின்றன.

இதனால் தேயிலைத் தோட்டப் பகுதியை ஒட்டிய இடங்களில் தண்ணீரும், உணவும் கிடைக்கும் போது காட்டுயானைகள் அந்த தேயிலைத் தோட்ட பகுதியிலேயே நின்று விடுகின்றன. இதனால் தேயிலை தோட்டங்களில் இலை பறிக்கும் பணி பாதிப்படைந்துள்ளது. வால்பாறை அருகே உள்ள நல்லமுடி மற்றும் முக்கோட்டுமுடி எஸ்டேட் பகுதிக்கு இடைப்பட்ட தேயிலைத் தோட்ட பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக 8 காட்டுயானைகள் பட்ட பகலிலேயே முகாமிட்டு நின்று வருகின்றன. மேலும் இந்த யானைகளில் சில சாலையை கடந்து செல்வதும் மீண்டும் தேயிலைத் தோட்ட பகுதிக்கு செல்வதுமாக இருந்து வருகின்றன.

இந்த யானைக் கூட்டத்துடன், மேலும் 4 யானைகள் நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் முகாமிட்டு நிற்பதால் சுற்றுலாபயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சி முனை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் நல்லமுடி, முக்கோட்டுமுடி ஆகிய எஸ்டேட் பகுதி மக்கள் அதிகாலை நேரத்தில் பணிக்கு செல்லும் போதும், மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும் போதும் கவனமாக செல்லவேண்டும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் அந்த பகுதியில் முகாமிட்டு கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com