காட்டுயானைகள் அட்டகாசம், தொழிலாளிய மிதித்து கொன்றது

குடியாத்தம் அருகே ஆந்திர எல்லையோரம் காட்டுயானைகள் கூலித்தொழிலாளியை மிதித்துக் கொன்றது. கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், என அதிகாரிகள் எச்சரிக்க விடுத்துள்ளனர்.
காட்டுயானைகள் அட்டகாசம், தொழிலாளிய மிதித்து கொன்றது
Published on

குடியாத்தம்

குடியாத்தம் அருகே ஆந்திர எல்லையோரம் காட்டுயானைகள் கூலித்தொழிலாளியை மிதித்துக் கொன்றது. கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், என அதிகாரிகள் எச்சரிக்க விடுத்துள்ளனர்.

காட்டுயானைகள் பிளிறியது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனப்பகுதி ஆந்திர மாநில எல்லையோரம் இருப்பதால், வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் அடிக்கடி தமிழக வனப்பகுதியிலும், விளை நிலங்களிலும் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. வனத்துறையினர் காட்டு யானைகள் கூட்டத்தை தொடர்ந்து விரட்டியடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் குடியாத்தத்தை அடுத்த ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் உள்ள புட்டவாரிபல்லி ஊராட்சி, பெருமாள்பல்லி கிராமம் அருகே 9 காட்டுயானைகள் கூட்டம் பாஸ்கர்ரெட்டியின் வீட்டருகே வந்து பிளிறியது. இதனால் அச்சமடைந்த அவரும், குடும்பத்தினரும் கிராம மக்களுக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

மிதித்துக் கொன்றது

குடியாத்தம் வனச்சரக அலுவலர் சரவணன்பாபு தலைமையில் வனவர் முருகன், வனக்காப்பாளர் நீலகண்டன், வனக்காவலர்கள் சத்யராஜ், அரவிந்தன் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து கிராம மக்கள் உதவியோடு காட்டுயானைகளை விரட்டியடித்தனர்.

காட்டு யானைகள் தமிழக எல்லையில் உள்ள குரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த அம்புஜம்மாள், ஜெகன்நாதரெட்டியின் நிலங்களுக்குள் புகுந்து ஒரு ஏக்கர் நெற்பயிரை சேதப்படுத்தியது.

அதைத்தொடர்ந்து காட்டுயானைகள் கூட்டம் மெல்ல நகர்ந்து வனப்பகுதிக்குள் சென்றன. அந்த நேரத்தில் தமிழக எல்லையையொட்டி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கம்பம்பல்லி பகுதியில் உள்ள தஞ்சாவூர் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைக்கான் (வயது 52) என்ற கூலித்தொழிலாளி வழக்கம்போல் காலை கூலி வேலைக்காக புறப்பட்டு வயல் வெளியில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

அவர், காட்டுயானைகள் கூட்டத்தைப் பார்த்து தப்பியோட முயன்றார். அப்போது விரட்டிச் சென்ற காட்டுயானை ஒன்று அவரை மிதித்து கொன்றது.

அதிகாரிகள் வந்து பார்த்தனர்.

இதற்கிடைய, காட்டுயானகள் கூட்டத்தை விரட்ட வந்த சுற்று வட்டாரக் கிராம மக்கள் காட்டில் வெள்ளைக்கான் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் யாதமரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி, வெள்ளைக்கான் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காட்டுயானைகள் கூட்டத்தால் கூலித்தொழிலாளி வெள்ளைக்கான் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட வன அலுவலர் பார்க்கவதேஜா உத்தரவின்பரில் உதவி வனப்பாதுகாவலர் முரளிதரன் வனத்துறையினருடன் சென்று காட்டு யானைகள் கூட்டம் சேதப்படுத்திய விளைநிலங்களையும், கூலித் தொழிலாளி வெள்ளைக்கான் இறந்து கிடந்த இடத்தையும் பார்வையிட்டனர்.

அப்போது உதவி வனப்பாதுகாவலர் முரளிதரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நுழையாமல் கண்காணிக்கப்படும்

ஆந்திர மாநிலம் சித்தூர் வனச்சரகத்தில் யாதமூர் வனப்பகுதியில் காட்டுயானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளது. கடும் வெயில் சுட்டெரிப்பதால் காலை நேரத்தில் தண்ணீர், உணவு தேடி ஆந்திர மாநில எல்லையோரம் உள்ள தமிழகப் பகுதிகளில் காட்டுயானைகள் புகுந்து விடுகின்றன. இதனால் தமிழக எல்லைப் பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு தண்டோரா மூலமும், துண்டு பிரசுரங்கள் மூலமும் எச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

குறிப்பாக எல்லைப்பகுதியில் உள்ள புட்டவாரிபல்லி, டி.பி.பாளையம், கொத்தூர் ஆகிய ஊராட்சிகளில் வசிக்கும் விவசாயிகள் இரவில் வனப்பகுதியையொட்டியபடி உள்ள நிலங்களுக்குச் செல்ல வேண்டாம். இரவில் நடமாட வேண்டாம்.

கிராம மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வண்டும். வனத்துறையினரின் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காட்டுயானைகள் மீண்டும் தமிழக வனப்பகுதிக்குள் நுழையாமல் கண்காணிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com