கொள்ளிடம் ரெயில்வே பாலத்தில் தடையை மீறி இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

கொள்ளிடம் ரெயில்வே பாலத்தில் தடையை மீறி இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கொள்ளிடம் ரெயில்வே பாலத்தில் தடையை மீறி இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
Published on

கொள்ளிடம்,

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடம் சோதனைச்சாவடியில் இருந்து கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் கடலூர் மாவட்டத்தை இணைப்பதாக அமைந்துள்ளது.

இந்த பாலத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் இதே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரெயில் பாலம் உள்ளது. தற்போது கொரோனா ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் கொள்ளிடம் சோதனைச்சாவடியில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

மாவட்டத்துக்கு உள்ளேயே இரு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்க முடியாத நிலையில் கடலூர் மாவட்டத்தை நோக்கி சிலர் இருசக்கர வாகனங்களில் செல்கின்றனர். அதேபோல் கடலூர் மாவட்ட பகுதியில் இருந்து நாகை மாவட்ட பகுதிக்கும் சில வாகனங்கள் தேவையில்லாமல் வருகின்றன. இதனை கண்காணிக்கும் வகையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு அபராதம் விதித்தும் வாகனங்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.

பாலத்தில் வேறு யாரும் செல்ல கூடாது

இந்த நிலையில் கொள்ளிடம் தேசிய நெடுஞ்சாலையில் இணைப்பு பாலமாக இருக்கின்ற கொள்ளிடம் ஆற்று பாலத்தை கடந்துசெல்ல சோதனைச்சாவடியில் உள்ள போலீசார் தடை விதித்துள்ள நிலையில் வாகனங்கள் எதுவும் சோதனைச்சாவடி வழியாக கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரெயில்வே பாலத்தில் ரெயில்வே ஊழியர்கள் தவிர வேறு யாரும் செல்லக் கூடாது என்ற தடை நடைமுறையில் இருந்து வருகிறது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஆனால் அதையும் மீறி ரெயில்வே பாலத்தில் ஆபத்தை உணராமல் பாலம் ஓரம் ரெயில்வே ஊழியர்களுக்காக உள்ள நடைபாதையில் பல இருசக்கர வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன. சிலர் ஆபத்தை உணராமல் ரெயில்வே பாலத்தில் செல்கின்றனர். நேற்று கொள்ளிடம் ரெயிவே பாலத்தில் பயணியர் ரெயில் வந்து கொண்டிருந்தபோது எதிரே நடைபாதையில் 2 பேர் இருசக்கர வாகனத்தில் சென்றனர். பாலத்தில் ரெயில் மெதுவாக வந்ததால் இவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இவ்வாறு ரெயில்வே பாலத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் மீது ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com