நூதன போதைப் பழக்கத்துக்கு அடிமையாகும் சிறுவர்கள் மீட்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

தேனி மாவட்டத்தில் நூதனமான cப் பழக்கத்துக்கு சிறுவர்கள் அடிமையாகி வருகின்றனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நூதன போதைப் பழக்கத்துக்கு அடிமையாகும் சிறுவர்கள் மீட்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
Published on

தேனி,

கஞ்சா விற்பனை என்றாலே, தேனி மாவட்டம் கம்பம் பகுதி தான் என்ற ஒருவிதமான பெயர் எடுத்துள்ளது. கம்பத்தை மையமாக வைத்து தேனி மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல இடங்களிலும் கஞ்சா வியாபாரம் நடக்கிறது. ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சாவை தரம் பிரித்து, பொட்டலம் போடும் பணி கம்பம் பகுதியிலேயே அதிக அளவில் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

அதற்கு ஏற்ப கடந்த காலங்களில் கம்பம் பகுதியில் தான் கஞ்சா விற்பனையில் அதிகம் பேர் சிக்கி உள்ளனர். அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மீண்டும் ஜாமீனில் வந்து அதே விற்பனையில் ஈடுபடுகின்றனர். குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் கூட, தண்டனை காலம் முடிந்து வந்து மீண்டும், மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கஞ்சாவுக்கு அடிமையான பலர், மாவட்டத்தில் பல இடங்களில் சுற்றித் திரிகின்றனர். குறிப்பாக பஸ் நிலையங்களில் கஞ்சா போதையுடன் திரிபவர்களை பார்க்க முடிகிறது. கஞ்சா, மது போதையில் இளைஞர்கள் ஒருபுறம் சீரழிந்து வரும் நிலையில், சிறுவர்களை மையப்படுத்தி நூதன போதைப்பழக்கம் பரவி வருகிறது.

அதாவது, இருமல் டானிக், வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டும் பசை, ஒயிட்னர் போன்ற பல பொருட்களை போதைப் பொருட்களாக பயன்படுத்தி வருகின்றனர். அத்துடன் கம்பம், போடி, தேனி பகுதிகளில் போதை மாத்திரை மிட்டாய்கள், போதை சாக்லெட் போன்றவை விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இவற்றையும் சிறுவர்கள் வாங்கி பயன்படுத்துவதால், அதில் கிடைக்கும் போதைக்கு பலர் அடிமையாகி வருகின்றனர்.

இதுபோன்ற போதைக்கு அடிமையாகி திருட்டு, அடிதடி, கொலை போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு கைதானவர்களும் உண்டு. அவ்வாறு சிக்கிய சிலர் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறுவர்கள் போதைக்கு அடிமையாகும் சம்பவம் போடி, கம்பம் பகுதிகளில் அதிக அளவில் நடக்கிறது.

இந்த பகுதிகளை சேர்ந்த பெற்றோர் பலர் தங்களின் பிள்ளைகளை விடுதிகளில் தங்கி படிக்க வைத்து விட்டு, அவர்கள் கேரள மாநிலத்துக்கு கூலி வேலைக்கு சென்று விடுகின்றனர். கேரளாவில் சில மாதங்கள் தங்கி இருந்து வேலை பார்ப்பதால், விடுமுறை நாட்களில் பொழுதுபோக்காக இதுபோன்ற போதைப் பொருட்களை சிறுவர்கள் சிலர் பயன்படுத்தத் தொடங்கி பின்னர் அதற்கு அடிமையாகி விடுகின்றனர்.

பிற்காலத்தில் அவர்கள் கஞ்சா போதைக்கும் அடிமையாகும் ஆபத்துகள் உள்ளன. தற்போது கோடை விடுமுறை என்பதால் இப்பழக்கம் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, இதுபோன்ற நூதன போதைப் பழக்கத்தை தடுக்க மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகமும், போலீஸ் துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், சிறுவர்களுக்கு போதையூட்டும் பொருட்களை விற்பனை செய்வோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com