ராமர் கோவில் பிரச்சினையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் : பிரகாஷ் அம்பேத்கர்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பிரச்சினையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என பிரகாஷ் அம்பேத்கர் வலியுறுத்தியுள்ளார்.
ராமர் கோவில் பிரச்சினையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் : பிரகாஷ் அம்பேத்கர்
Published on

மும்பை,

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அவசர சட்டம் இயற்றக்கோரி வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட பரிபா பகுஜன் மகாஜன் கட்சியின் தலைவர் பிரகாஷ் அம்பேத்கரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்து பிரகாஷ் அம்பேத்கர் கூறியதாவது:-

ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் அவசர சட்டம் இயற்றுவது என்பது சாத்தியமற்றதாகும். இதுகுறித்து தெரிவிக்க ஆர்.எஸ்.எஸ். யார்? மோகன் பகவத் யார்? இது தொடர்பாக மக்களின் மனநிலையை அறிந்துகொள்ள வாக்கெடுப்பு நடத்தவேண்டும்.

மேலும் ராமர் கோவில் பிரச்சினை மீண்டும் தலைதூக்க, பா.ஜனதா கூட்டணி கட்சியான சிவசேனா தான் காரணம் என குற்றம் சாட்டிய அவர், வாய் ஜாலங்களால் மக்களை அவர்களால் ஏமாற்ற முடியாது என கூறினார்.

மேலும் காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், கூட்டணி குறித்து மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்களை ஒருமுறை மட்டுமே சந்தித்து பேசினேன். அப்போது என்னுடைய கோரிக்கைகள் குறித்து தங்கள் கட்சியின் தேசிய தலைமைக்கு தெரிவிப்பதாக அவர்கள் கூறினர். பின்னர் அவர்கள் என்னை தொடர்பு கொள்ளவில்லை என்றார்.

ஏற்கனவே அவர் ஆசாதுதின் ஓவைசியின், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கப்போவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com