கோத்தகிரி அருகே 4 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியங்களை பார்வையிட அனுமதி வழங்கப்படுமா?

கோத்தகிரி அருகே 4 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியங்களை பார்வையிட அனுமதி வழங்கப்படுமா என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
பாறை ஓவியங்களை படத்தில் காணலாம்.
பாறை ஓவியங்களை படத்தில் காணலாம்.
Published on

கோத்தகிரி

நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற நினைவு சின்னங்கள் ஏராளம். அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைதரம், வாழ்க்கை முறை, அவர்கள் வாழ்ந்த காலம் ஆகியவற்றை கண்டுபிடிக்க முடிகிறது. அவர்கள் வரைந்த ஓவியங்கள், பயன்படுத்திய கருவிகள், பொருட்கள் ஆகியவற்றை பாதுகாப்பது நமது தலையாய கடமை ஆகும். அதை நாம் செய்யாததால், அந்த நினைவுகள் அழிந்து வருகின்றன.

கோத்தகிரியில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் காரிக்கையூர் என்ற ஆதிவாசி கிராமம் உள்ளது. இங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் பொறிவறை என்ற இடத்தில் 53 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலம் கொண்ட பாறையில் 500-க்கும் மேற்பட்ட பழங்குடியினரின் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.

இந்த பாறை ஓவியங்கள் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய, இடைக்கற்காலத்தை சேர்ந்தவர்கள் வரைந்து இருக்கலாம் என்று தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். வரலாற்றுச் சான்றாக விளங்கும் இந்த பாறை ஓவியங்கள், மழை மற்றும் இயற்கை சீற்றங்களால் அழிவின் விளிம்பில் உள்ளன.

மேலும், அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைந்த சிலர் இந்த வரலாற்று சின்னங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாமல், ஓவியங்களை சேதப்படுத்தினர். இது குறித்து தகவல் அறிந்த தொல்லியல் துறையினர், அந்த பகுதியை நேரில் ஆய்வு செய்து பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தனர். இதையடுத்து அந்த பாறை ஓவியங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அங்கு செல்ல யாருக்கும் அனுமதியும் வழங்கப்படுவது இல்லை. இந்த பாறை ஓவியங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி அளித்தால், பழங்கால வாழ்க்கை முறையை தெரிந்து கொள்வதுடன், ஓவியங்கள் குறித்து அறிந்து கொள்ளவும் முடியும். எனவே ஓவியங்களை பார்க்க அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு சுற்றுலா பயணிகளுக்கு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது.

இங்குள்ள பாறை ஓவியம், தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய பாறை ஓவியம் என்று கூறப்படுகிறது. கலை, வாழ்வியல், பழங்குடியினரின் கலாசாரம், தொழில், உணவு, வேட்டை, விலங்குகள், பறவைகள், சடங்கு கள் முதலியவற்றை ஆதி மனிதர்கள் பாறைகளில் கற்களை கொண்டு செதுக்கல் ஓவியங்களாகவும், மிருகத்தின் கொழுப்பு, ரத்தம், மரப்பிசின், செம்மண், வெண்கற்கள் ஆகியவற்றை பயன்படுத்தியும் ஓவியங்களை வரைந்து உள்ளனர்.

கோத்தகிரியில் மட்டும் நான்கு இடங்களில் பாறை ஓவியங்கள் உள்ளன. இதில், கரிக்கையூரில் உள்ள பாறை ஓவியங்களில், 150 ஓவியங்கள் சேதப்படுத்தப்பட்டு அழியும் நிலையில் உள்ளன. இது தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் அனுமதி பெறாமல் உள்ளே செல்ல முடியாது.

வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலா மூலம் சுற்றுலா பயணிகளை இங்கு அழைத்து சென்று தகுந்த பாதுகாப்புடன் பாறை ஓவியங்களை பார்வை யிட அனுமதி கொடுத்தால் அந்த ஓவியங்கள் குறித்து தெரிந்து கொள்ள முடியும். அந்த ஓவியங்கள் வெளி உலகத்துக்கு தெரிய வரும். இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வரும்போது வருவாயும் கிடைக்கும். அதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com