புதர்போல் மண்டிகிடக்கும் ஆகாய தாமரைகள் அகற்றப்படுமா? - விவசாயிகள் எதிர்பார்ப்பு

தேவூர் கடுவையாற்றில் புதர்போல் மண்டி கிடக்கும் ஆகாய தாமரைகள் அகற்றப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
புதர்போல் மண்டிகிடக்கும் ஆகாய தாமரைகள் அகற்றப்படுமா? - விவசாயிகள் எதிர்பார்ப்பு
Published on

கீழ்வேளூர்,

டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதியான நாகை மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆறுகளில் கடுவையாறும் ஒன்று.இந்த ஆறு திருவாரூர் பகுதியில் இருந்து பிரிந்து காக்கழனி, ஆத்தூர், இரட்டை மதகடி, தேவூர் வழியாக இருக்கை, வடுகச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறது. இந்த ஆற்றின் பாசன வாய்க்கால்கள் மூலம் சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பெய்யாததாலும், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடாததாலும் சம்பா சாகுபடி பொய்த்து போனது.

இந்த நிலையில் இந்த ஆண்டு கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு கூடுதல் தண்ணீர் வந்தது. இதை தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் 19-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்தது. இதை தொ டர்ந்து கடந்த 22-ந் தேதி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடுவையாற்றில் ஓடுகிறது.

தேவூர், இரட்டை மதகடி, ஆத்தூர், ராதா மங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுவையாற்றில் ஆகாய தாமரை செடிகள் புதர் போல் மண்டி காணப்படுகிறது. இதனால் ஆற்றில் இருந்து பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் செல்ல முடியாமல் உள்ளதால் வயல்களில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடுவையற்றில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com