மாநகராட்சி தேர்தலில், தி.மு.க.விடம் கூடுதல் இடம் கேட்கப்படுமா? அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் பேட்டி

மாநகராட்சி தேர்தலில் தி.மு.க.விடம் கூடுதல் இடம் கேட்கப்படுமா? என கேட்டதற்கு அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் பதில் அளித்தார்.
மாநகராட்சி தேர்தலில், தி.மு.க.விடம் கூடுதல் இடம் கேட்கப்படுமா? அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் பேட்டி
Published on

திருச்சி,

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டு உள்ளது. இதன் வெளிப்பாடு தான் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை தழுவி உள்ளது. அடுத்து நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் 9 மாவட்டங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்.

பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி

ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்த கருத்தினால் தி.மு.க.வுடன் சர்ச்சை ஏற்பட்டது. அழகிரி மற்றும் தலைவர்கள் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசியதை தொடர்ந்து இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு சுமுக தீர்வு ஏற்பட்டு உள்ளது.

சில உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கவுன்சிலர்கள் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் பற்றி தமிழக காங்கிரஸ் கமிட்டி விசாரணை நடத்தி வருகிறது. அகில இந்திய செயலாளரான நான் இதுபற்றி கருத்து சொல்ல முடியாது.

கூடுதல் இடம்?

மாநில தலைமை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதன் பின்னர் தான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பார்வைக்கு வரும். அதேபோல் மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. தலைமையிடம் காங்கிரசுக்கு கூடுதல் இடம் கேட்கப்படுமா? என்ற கேள்விக்கும் மாநில தலைமை தான் இதுபற்றி முடிவு செய்யும் என்பதையே எனது பதிலாக அளிக்கிறேன்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.2 சதவீதம் அளவிற்கு சரிவடைந்து விட்டது. இதனை சீரமைக்க மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இந்திய பொருளாதாரம் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவிலேயே உள்ளது. பிரதமர் மோடி தமிழகத்திற்கு எந்தவித நல்ல திட்டங்களையும் இதுவரை வழங்கவில்லை. இதனால் பா.ஜ.க. மீதும், அதனுடன் கூட்டணியில் உள்ள அ.தி.மு.க. அரசு மீதும் தமிழக மக்கள் கடும் வெறுப்பில் உள்ளனர். இந்த வெறுப்பு தமிழக சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாசலம் மன்றத்தில் திருச்சி மாநகராட்சி தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் சஞ்சய் தத் ஆலோசனை நடத்தினார். மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள் கோவிந்தராஜ், கலை, முன்னாள் தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ், மாவட்ட செயலாளர் ராஜாடேனியல் ராய், பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com