

திருவண்ணாமலை,
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. இந்த ஊரில் உள்ள மலையில் சித்தர்கள் தவம் புரிந்துள்ளனர். அருணாசலேஸ்வரரின் தீவிர பக்தரான நமச்சிவாயர் என்பவர் இப்போது குகை நமச்சிவாயர் கோவிலின் பின்புறம் உள்ள மலைமீது கடுந்தவம் புரிந்துள்ளார். பின்னர் அவர் அதே இடத்தில் ஜீவசமாதி அடைந்தார்.
அதனை தொடர்ந்து அந்த பகுதியில் அவரது பெயரிலேயே அறக்கட்டளையும் தொடங்கப்பட்டது. அவரின் ஜீவசமாதி அமைந்துள்ள மலை அடிவாரத்தில் அறக்கட்டளைக்கு சொந்தமாக 2 ஏக்கர் 51 சென்ட் நிலம் இருந்து உள்ளது. தற்போது இந்த இடத்தின் மதிப்பு சுமார் ரூ.100 கோடி என்று கூறப்படுகிறது.
ஏலம்
1979-ம் ஆண்டு திருவண்ணாமலையை சேர்ந்த ஒருவர் இந்த இடத்தை 90 ஆண்டுகள் வரை குத்தகைக்கு எடுத்ததாக தெரிகிறது. பின்னர் அவர் வங்கி ஒன்றில் நிலத்தின் பேரில் கடன் பெற்றுள்ளார். சம்பந்தப்பட்ட நபர் கடனை முறையாக செலுத்தாததால் இந்த இடத்தினை சம்பந்தப்பட்ட வங்கி ஏலம் விட்டுள்ளது. இதனை ஏலத்தில் எடுத்த நபர்கள் 2 ஏக்கர் நிலத்தில் தற்போது பல்வேறு கட்டிடங்களை கட்டியுள்ளனர்.
இது தொடர்பாக திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனத் தலைவர் ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரி இது குறித்து விசாரணை நடத்தி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து வருகிற 21-ந் தேதி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
நில அளவைப்பணி
அதனை தொடர்ந்து நேற்று திருவண்ணாமலை தாசில்தார் அமுல், நில அளவை அதிகாரிகள், நகராட்சி அலுவலர்கள், மின் வாரிய அலுவலர்கள் திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனத்தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் குகை நமச்சிவாயர் அறக்கட்டளைக்கு சொந்தமான இடம் என கருதப்படும் பகுதியில் நில அளவை செய்தனர்.
நேற்று மாலை இது குறித்து தாலுகா அலுவலகத்திலும் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இது தொடர்பான விரிவான அறிக்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் விரைவில் சென்னை ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது.