தேனி கொட்டக்குடி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளும் கும்பல் நடவடிக்கை எடுக்கப்படுமா?

தேனி கொட்டக்குடி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி கொட்டக்குடி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளும் கும்பல் நடவடிக்கை எடுக்கப்படுமா?
Published on

தேனி,

தேனி மாவட்டத்தில் ஆறுகள், ஓடைகளில் அனுமதியின்றி மணல் அள்ளும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகள் எடுத்தாலும் மணல் அள்ளும் கும்பல் தங்கள் கைவரிசையை அரங்கேற்றி கொண்டே இருக்கின்றன. இதனால், ஆறு மற்றும் ஓடைகளின் வளம் பறிபோய் வருகிறது.

மாவட்டத்தில் மணல் திருட்டு நடக்கும் இடங்களில் கொட்டக்குடி ஆறு முக்கிய இடமாக உள்ளது. கொட்டக்குடி பகுதியில் உற்பத்தியாகி தேனியில் முல்லைப்பெரியாற்றுடன் சங்கமிக்கும் இந்த ஆற்றில் பல இடங்களில் ஒரு கும்பல் மணல் அள்ளி வருகிறது. போடி, அணைக்கரைப்பட்டி, கோடாங்கிபட்டி, பூதிப்புரம் பகுதிகளை தொடர்ந்து தேனியிலும் மணல் அள்ளப்படுகிறது. அதுவும் பட்டப்பகலில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

குறிப்பாக தேனி கொட்டக்குடி ஆற்றில் பட்டப்பகலில் சாக்குமூட்டைகளில் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மணல் அள்ளி கடத்தி வருகின்றனர். சாக்குகளில் மணல் அள்ளி மூட்டைகளாக கட்டுவதற்கு சிறுவர்களை வேலைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

அதன்படி, பகல் நேரங்களில் சிறுவர்கள் ஆற்றுக்குள் இறங்கி சாக்குகளில் மணல் அள்ளி வைக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். அந்த மூட்டைகளை ஒரு கும்பல் எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

இதுபோன்ற மணல் திருட்டை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com