பணத்துக்கு ஆசைப்பட்டு நகைக்கடை ஊழியர் மகனை கடத்திய 17 வயது சிறுமி கைது

பணத்துக்கு ஆசைப்பட்டு நகைக்கடை ஊழியர் மகனை கடத்திய 17 வயது சிறுமியை போலீசார் கைது செய்து சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
பணத்துக்கு ஆசைப்பட்டு நகைக்கடை ஊழியர் மகனை கடத்திய 17 வயது சிறுமி கைது
Published on

தானே,

தானே மாவட்டம் பிவண்டியை சேர்ந்த நகைக்கடை ஊழியர் ஒருவரின் 11 வயது மகன் நேற்று முன்தினம் மதியம் டியூசன் வகுப்புக்கு சென்றான். ஆனால் அவன் மாலை வரையிலும் வீடு திரும்பவில்லை. இதனால் சிறுவனின் தாய் கலக்கம் அடைந்தார். இந்தநிலையில், அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பெண் ஒருவர் பேசினார்.

அப்போது அந்த பெண், நான் உனது மகனை கடத்தி வைத்து உள்ளேன். உடனடியாக ரூ.6 லட்சம் எடுத்து கொண்டு பிவண்டி சிவாஜி சவுக் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் ஒரு மோட்டார் சைக்கிளில் வைக்க வேண்டும். இல்லையெனில் உனது மகனை கொன்று விடுவேன் என்று மிரட்டினார்.

இதைக்கேட்டு சிறுவனின் தாய் அதிர்ச்சியில் உறைந்தார். உடனடியாக இதுபற்றி தனது கணவரிடம் தெரிவிப்பதற்காக அவர் வேலை பார்க்கும் நகைக்கடைக்கு பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தார். அப்போது, அந்த கடை அருகில் உள்ள சாலையில் தனது மகன் தனியாக அழுது கொண்டிருந்ததை கவனித்தார்.

உடனே அங்கு சென்று அவனை மீட்டார். அப்போது, தன்னை கடத்திய பெண்ணிடம் இருந்து தான் தப்பி ஓடி வந்ததாக அவன் கூறினான். உடனே அவனது தாய் இதுபற்றி சாந்தி நகர் போலீசில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து போலீசார், சிறுவனை கடத்திய பெண் கேட்ட தொகையை அவர் கூறிய இடத்தில் கொண்டு போய் வைக்கும்படி சிறுவனின் தாயிடம் கூறினர்.

அதன்பேரில் சிறுவனின் தாய் சிவாஜி சவுக் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளில் ஒரு பையை வைத்தார். பின்னர் மகனை கடத்திய பெண்ணுக்கு போன் செய்து, சொன்னபடி பணத்தை வைத்து விட்டதாக கூறினார்.

இதை நம்பி அந்த பெண் அங்கு வந்தார். அப்போது அவர் குர்தா அணிந்து இருந்தார். மோட்டார் சைக்கிளில் இருந்த பையை எடுத்த போது, அங்கு மறைந்து இருந்த போலீசார் அந்த பெண்ணை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில், அவர் 17 வயது சிறுமி என்பது தெரியவந்தது. மேலும் அவர் சிறுவன் வசித்து வரும் பகுதியை சேர்ந்தவள் என்பதும் தெரியவந்தது. பணத்துக்கு ஆசைப்பட்டு சிறுவனை கடத்தியதாக அவள் போலீசாரிடம் கூறினாள். இதையடுத்து போலீசார் அவளை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com