

பேரணாம்பட்டு,
பேரணாம்பட்டு வேளாண்மைத் துறை சார்பில் கூட்டுப்பண்ணை திட்டம் மூலம் உறுப்பினர்களாக சேரும் விவசாயிகள் பயன்பெற மானிய விலையில் டிராக்டர்கள் வழங்கப்பட்டன. இந்த டிராக்டர்களை பயன்படுத்த கூடுதல் வாடகை கேட்பதாக உறுப்பினர்களாக சேர்ந்தவர்கள் புகார் அளித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கலெக்டருக்கும், வேளாண்மை இயக்குனருக்கும் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
பேரணாம்பட்டு அருகே உள்ள ஏரிகுத்தி கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர். இவர்கள் தங்களுக்கு சொந்தமான சுமார் 540 ஏக்கர் வேளாண்மை நிலங்களில் நெல், வேர்க்கடலை, சோளம், வெண்டை மற்றும் தீவனங்களை பயிரிட்டு வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த 100 விவசாயிகள் தலா 20 பேர் வீதம் 5 விவசாய குழுவை ஏற்படுத்தினர். கடந்த 2018-ம் ஆண்டு விவசாய குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட ரூ.60 ஆயிரம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கணக்கில் டெபாசிட் செலுத்தப்பட்டது.
மேலும் கூடுதலாக ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தி ரூ.5 லட்சம் அரசு மானியத்தில் விவசாய கூட்டுப்பண்ணை திட்டத்தின் மூலம் டிராக்டர் வாங்கப்பட்டது. இந்த டிராக்டரை விவசாய பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
ஆனால் அரசு மானியத்தில் விவசாய குழுவிற்காக வழங்கப்பட்ட டிராக்டரை விவசாய பயன்பாட்டிற்கு வாடகைக்கு விடும் தனியார் பொறுப்பாளர், மற்றவர்களுக்கு வாங்கும் வாடகையை விட இவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் டிராக்டரை பயன்பாட்டுக்கு விட வேண்டும். ஆனால் விவசாய குழுவின் நிர்வாகிகள் கூட்டுப்பண்ணை திட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.600 வாடகை கட்டணத்தில் இயக்காமல் ரூ.800 வாடகையாக அதிக பணம் கேட்டு வருகின்றனர்.
இந்த டிராக்டரானது விவசாய பண்ணை திட்டத்திற்கு இயக்க மாட்டோம் என கூறி நிர்வாகிகள் அவர்களது சொந்த நிலங்களில் பயன்படுத்தி கொண்டு வருகின்றனர். மேலும் மாதந்தோறும் கூட்டுப்பண்ணை திட்டத்தின் மூலம் டிராக்டர் பயன்படுத்தப்பட்ட வரவு-செலவு குறித்து கூட்டம் நடத்தாமல் இருந்து வருகின்றனர்.
இது குறித்து பேரணாம்பட்டு வேளாண்மை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் வேளாண்மை துறை அதிகாரிகள் யாரும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கலெக்டரும், வேளாண்மை இயக்குனரும் இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.