ரூ.7.4 கோடி பரிசு தொகையுடன் சர்வதேச விருதை வென்ற மராட்டிய ஆசிரியர் 50 சதவீத பணத்தை 2-ம் இடம் பிடித்தவர்களுக்கு வழங்குகிறார்

சர்வதேச ஆசிரியர் விருதை வென்ற சோலாப்பூரை சேர்ந்த ஆசிரியர் பாசாக பெற்ற ரூ.7.4 கோடியில் 50 சதவீதத்தை தன்னுடன் இறுதி சுற்றில் போட்டியிட்டவர்களுக்கு வழங்குகிறார்.
ரூ.7.4 கோடி பரிசு தொகையுடன் சர்வதேச விருதை வென்ற மராட்டிய ஆசிரியர் 50 சதவீத பணத்தை 2-ம் இடம் பிடித்தவர்களுக்கு வழங்குகிறார்
Published on

மும்பை,

இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டனை சேர்ந்த அறக்கட்டளை ஒன்று ஆண்டு தோறும் கல்வி பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை கவுரப்படுத்தும் வகையில் சர்வதேச ஆசிரியர் விருதை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு சர்வதேச ஆசிரியர் விருதுக்காக உலகம் முழுவதும் இருந்து சுமார் 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

இதில் மராட்டிய மாநிலம் சோலப்பூரை சேர்ந்த ஆசிரியர் ரஞ்சித் சிங் திசாலே சர்வதேச ஆசிரியர் விருதை வென்று உள்ளார்.

ரஞ்சித்சிங் திசாலே சோலாப்பூர் மாவட்டம் பரிதேவாடி மாவட்ட பஞ்சாயத்து ஆரம்ப பள்ளியில் கடந்த 2009-ல் பணிக்கு சேர்ந்தார். அப்போது அந்த பள்ளி மாட்டு தொழுவத்திற்கும், குப்பை கிடங்குக்கும் இடையே இருந்து உள்ளது. முதலில் பள்ளி கட்டிடத்தை சீரமைத்த அவர் உள்ளூர் மொழியில் மாணவர்களுக்கு பாடப்புத்தகம் கிடைக்க செய்தார்.

இதேபோல க்யூர்.ஆர் கோடு மூலம் மாணவர்களுக்கு ஆடியோ, வீடியோ வடிவில் பாடங்கள் கிடைக்க வழி செய்தார். இதனால் அந்த கிராமத்தில் பெண் குழந்தைகளின் பள்ளி வருகையை 100 சதவீதம் உறுதி செய்தார்.

இந்தநிலையில் சர்வதேச ஆசிரியர் விருதை வெற்றி பெற்ற ஆசிரியருக்கு 10 லட்சம் டாலர் (ரூ.7.4 கோடி) பரிசாக வழங்கப்பட உள்ளது. இதில் அவர் 50 சதவீதத்தை தன்னுடன் இறுதி சுற்றுவரை வந்த 10 போட்டியாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது.

ஆசிரியர்கள் எப்போதும் தங்களது அறிவை மாணவர்கள் இடையே பகிர்ந்து கொள்பவர்கள். கல்விதுறையில் நான் செய்த பணிக்காக இந்த பரிசு கிடைத்து இருக்கிறது. எனவே பரிசு தொகையில் 50 சதவீத்தை 2-வது இடம் வந்த ஆசிரியர்களுக்கு வழங்குகிறேன். இது அவர்கள் தங்களது நாட்டில் செய்ய இருந்த பணிகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும். நான் இந்திய மாணவர்களுக்காக பணியாற்ற விரும்புகிறேன். அதே நேரத்தில் நாடுகளில் எல்லைகளில் உள்ள மாணவர்களுக்காகவும் பணியாற்ற விரும்புகிறேன்.

இந்த உலகமே எனது வகுப்பறை என நம்புகிறேன். இதேபோல பரிசுத்தொகையில் 30 சதவீதத்தை ஆசிரியர் புத்தாக்க நிதிக்கு ஒதுக்க திட்டமிட்டு உள்ளேன். நாட்டில் பல ஆசிரியர்கள் பாடம் கற்று கொடுக்க பல புதிய முறைகளை கண்டுபிடித்து வருகின்றனர். அந்த கண்டுபிடிப்புகளுக்கு இந்த தொகை உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com