குடியாத்தம் பகுதியில் குறைந்த தொழிலாளர்களுடன் தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்க தொடங்கின

குடியாத்தம் பகுதியில் ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்டு இருந்த தீப்பெட்டி தொழிற்சாலைகள் குறைவான தொழிலாளர்களுடன் மீண்டும் இயங்க தொடங்கியுள்ளன. தொழில் சீராக நடைபெற தேவையான மூலப்பொருட்கள் கிடைக்க அரசு உதவ வேண்டும் என சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடியாத்தம் பகுதியில் குறைந்த தொழிலாளர்களுடன் தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்க தொடங்கின
Published on

குடியாத்தம்,

வேலூர் மாவட்டம் குடியாத்தத்துக்கு, குட்டி சிவகாசி எனப் பெயர் உண்டு. இந்த பகுதியில் 125 சிறிய அளவிலான குடிசை தீப்பெட்டி தொழிற்சாலைகளும், பகுதி இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் 15-ம் உள்ளன. இந்தத் தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.

இந்தத் தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு தேவையான குச்சி கேரள மாநிலத்தில் இருந்தும், குளோரைடு, பேப்பர் மற்றும் போர்டுகள் தெலுங்கானா மாநிலம் மற்றும் சிவகாசி, விருதுநகர் மாவட்டங்களில் இருந்தும் கொண்டு வரப்படுகிறது. இதற்கு தேவையான மெழுகு, ஈரான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தத் தீப்பெட்டி தொழிற்சாலையில் தடுக்கு அடுக்குவது, பர்த்தி போடுவது, மடிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பெண் தொழிலாளர்கள் அதிக அளவு ஈடுபட்டு வந்தனர். அவர்களுக்கு வருமானம் தரும் முக்கிய தொழில் தீப்பெட்டி தொழில் தான்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 20 நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தீப்பெட்டி தொழிற்சாலைகள் முற்றிலும் இயங்கவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். பலகோடி ரூபாய் மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் வெளியூருக்கு அனுப்ப முடியாமல் தேங்கி உள்ளது.

இந்தநிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகள் பல்வேறு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடத்த வருவாய்த்துறையினர் அனுமதி அளித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், குடியாத்தம் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் அமைச்சர் கே.சி. வீரமணி, வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், குடியாத்தம் தாசில்தார் வத்சலா ஆகியோரிடம் குடியாத்தத்தில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்குமாறு மனு அளித்தனர்.

இதையடுத்து அதிகாரிகள் தீப்பெட்டி தொழிற்சாலைகளை ஆய்வுசெய்து பாதுகாப்பு வழிமுறைகளை உறுதி செய்து அரசின் பல்வேறு விதிமுறைகள், பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடித்து தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளித்தனர்.

இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கூறுகையில், தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்க பல்வேறு விதிமுறைகள், வழிகாட்டுதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுதி இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலையில் 50 தொழிலாளர்களுக்கு குறைவாக இருக்க வேண்டும். அவர்கள் தொழிற்சாலைகளுக்குள் நுழையும்போது கிருமி நாசினி கொண்டு கை, கால்களை சுத்தம் செய்த பின்னர் தொழிற்சாலைகளுக்குள் அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்சம் இரண்டு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.

அனைவரும் முகக் கவசம் அணிந்து இருக்க வேண்டும். உடல் நலம் பாதிக்கப்பட்டோர் வெளியூரைச் சேர்ந்தவர்கள் இப்பணியில் ஈடுபடுத்த கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. குடிசை தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு அதிகபட்சம் ஆறு தொழிலாளர்களை கொண்டே இயக்க வேண்டும். இதைத்தொடர்ந்து கடந்த ஓரிரு நாட்களாக குறைந்த அளவு தொழிலாளர்களை கொண்டு தீப்பெட்டி தொழிற்சாலைகள் மற்றும் குடிசை தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இந்தத் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் மிகவும் கண்டிப்புடன் பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றி வருகின்றனர். தற்போது தீப்பெட்டி தொழிற்சாலைகள் மீண்டும் இயங்கினாலும் இதற்கான மூலப் பொருட்கள் ஒருசில தினங்களுக்கு இருப்பதாக தெரிவிக்கின்றனர். இந்த மூலப் பொருட்கள் வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வர உள்ளதால் தீப்பெட்டி தொழில் பாதிப்பில் இருந்து மீள முடியவில்லை என்றனர்.

வட மாநிலங்களில் அத்தியாவசியத் தேவையான தீப்பெட்டிக்கு நல்ல தேவை இருந்தும் தீப்பெட்டிகள் சப்ளை செய்ய முடியாத நிலை உள்ளதாகவும், உற்பத்தி செய்யப்பட்ட தீப்பெட்டி பண்டல்களை ஏற்றிச்செல்ல அனுமதி அளிக்கப்பட்டாலும் லாரிகளில் கொண்டு செல்லும் பணிக்கு டிரைவர்கள் கிடைக்கவில்லை. எனவே தீப்பெட்டி தொழில் தங்குத் தடையின்றி சீராக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அதற்கு தேவையான மூலப்பொருட்கள் கிடைக்க அரசு உதவ வேண்டும், என சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com