வழிகாட்டு நெறிமுறைகளுடன் சினிமா தியேட்டர்கள் நாளை மறுநாள் திறப்பு - சுத்தம் செய்யும் பணி தீவிரம்

வழிகாட்டு நெறிமுறைகளுடன் சினிமா தியேட்டர்கள் நாளை மறுநாள் திறக்கப்படுகிறது. இதையொட்டி சினிமா தியேட்டர்களில் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வழிகாட்டு நெறிமுறைகளுடன் சினிமா தியேட்டர்கள் நாளை மறுநாள் திறப்பு - சுத்தம் செய்யும் பணி தீவிரம்
Published on

விழுப்புரம்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்நோய் பரவலுக்கு மத்தியிலும் பொருளாதார, வாழ்வாதார நடவடிக்கைகளை கவனிக்க வேண்டிய அவசியம் எழுந்ததால் மத்திய அரசு, 5 கட்டங்களாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து நடைமுறைப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வின்போது, நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) முதல் சினிமா தியேட்டர்கள் இயங்கலாம் என்றும், தியேட்டர்கள் 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும், ஒரு இருக்கை விட்டு அடுத்த இருக்கையில் பார்வையாளர்கள் அமர வேண்டும், அவர்கள் காட்சியின் இறுதி வரை முக கவசம் அணிந்திருக்க வேண்டும், இடைவேளையின்போது பொது பகுதிகள், லாபிகள், கழிவறைகள் ஆகிய இடங்களில் கூட்டம் சேருவது தவிர்க்கப்பட வேண்டும், ஒவ்வொரு காட்சி முடியும்போதும் அரங்குக்கு உள்ளேயும், கழிவறையிலும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்று பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

அதன்படி கடந்த 8 மாதங்களாக மூடிக்கிடக்கும் சினிமா தியேட்டர்கள் நாளை மறுநாள் முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை விழுப்புரம், வளவனூர், கண்டமங்கலம், விக்கிரவாண்டி, அனந்தபுரம், செஞ்சி, திண்டிவனம் உள்ளிட்ட இடங்களில் உள்ள 15 தியேட்டர்களும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 20 தியேட்டர்களும் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி 2 மாவட்டங்களிலும் உள்ள சினிமா தியேட்டர்களை சுத்தம் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. தியேட்டரில் பார்வையாளர்கள் அமரும் இடம், டிக்கெட் பெறும் மையம், வாகனங்கள் நிறுத்துமிடம், தின்பண்டங்கள் வாங்கும் இடம், கழிவறை உள்ளிட்ட அனைத்து இடங்களையும் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்..

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com