குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி, காலிக்குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

வருசநாடு அருகே, குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலிக்குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி, காலிக்குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
Published on

கடமலைக்குண்டு,

பருவமழை பொய்த்து விட்டதால், தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வறட்சி தாண்டவம் ஆடுகிறது. குறிப்பாக கிராமம், நகரம் என்ற பாகுபாடின்றி அனைத்து பகுதிகளிலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பொதுமக்கள் தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

சில இடங்களில் விலை கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி வருசநாடு அருகே உள்ள மேலபூசனூத்து கிராமத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கிற 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அவதிப்பட்டு வருகிறார்கள்.

ஊராட்சி நிர்வாகம் சார்பில், ஆழ்துளை கிணறுகள் அமைத்து இந்த கிராமத்துக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக வருசநாடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்யவில்லை.

மேலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அந்த கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணறுகள் தண்ணீர் இன்றி வறண்டு விட்டது.

இதனால் மோட்டார் சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மூலம் அருகே உள்ள கிராமங்களுக்கு சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். எனவே புதிதாக ஆழ்துளை கிணறுகளை அமைத்து தங்களது கிராமத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மேலபூசனூத்து கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் கிராம மக்கள், குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருப்பதிவாசகன், கருப்பசாமி ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மேலபூசனூத்து கிராமத்தில் புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பேரில் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com