

நெல்லை,
பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் வருகிற மார்ச் மாதம் நடைபெறுகிறது. இதற்கு தேவையான வினாத்தாள் கட்டுகள் 2 கன்டெய்னர் லாரிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று நெல்லைக்கு கொண்டு வரப்பட்டன. அவை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ரோட்டில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் உள்ள பாதுகாப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலா மற்றும் கல்வி அலுவலர்கள் அங்கு சென்று நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் அங்கிருந்து நெல்லை, தென்காசி, சேரன்மாதேவி, சங்கரன்கோவில், வள்ளியூர் ஆகிய 5 கல்வி மாவட்ட அளவில் அமைக்கப்பட்டு உள்ள 10 பாதுகாப்பு மையங்களுக்கும் தேவையான அளவு வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அந்த மையங்களை பூட்டி சீல் வைக்கப்பட்டன.
இந்த வினாத்தாள்கள் கொண்டு செல்லும்போது போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகளுக்கான மொழிப்பாடங்கள் உள்ளிட்ட முதல்கட்ட தேர்வுகளுக்கு உரிய வினாத்தாள்கள் வந்துள்ளன. படிப்படியாக அனைத்து தேர்வுகளுக்கும் உரிய வினாத்தாள்கள் வழங்கப்படும். இவை அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட நாட்களில் தேர்வு நடைபெறும் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும் என்றனர்.