பிரெஞ்சு அரசு உதவியுடன் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் - நாராயணசாமி தகவல்

பிரெஞ்சு அரசு உதவியுடன் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
பிரெஞ்சு அரசு உதவியுடன் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் - நாராயணசாமி தகவல்
Published on

புதுச்சேரி,

புதுவை கலெக்டர் அலுவலகத்தில் புதிதாக 2 மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ஷாஜகான், வெங்கடேசன் எம்.எல்.ஏ., வருவாய்த்துறை செயலாளர் அசோக்குமார், புதுச்சேரி கலெக்டர் அருண், காரைக்கால் கலெக்டர் விக்ராந்த்ராஜா, சப்-கலெக்டர் சுதாகர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

அப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

கலெக்டர் அலுவலகத்தில் தற்போது 2 மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை தொடங்கி உள்ளோம். பல மாநிலங்களில் இப்போது தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. புதுவை மாநிலத்தில் அதிர்ஷ்டவசமாக நிலத்தடி நீர் உள்ளது. அதிகப்படியாக உறிஞ்சுவதால் நிலத்தடி நீர்மட்டம் கீழே சென்று எதிர்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படும்.

இதனால் குடிநீர், விவசாயம் பாதிக்கப்படும். புதிதாக வீடுகட்டுபவர்களும், அரசாங்க அலுவலகங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு கட்டாயம் அமைக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதை அனைவரும் கடைபிடிக்கவேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளோம். மழைநீர் சேகரிப்புக்காக மத்திய அரசும் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.

புதுவையில் பொதுப்பணி, உள்ளாட்சி, வருவாய், சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகள் இணைந்து இவற்றை செயல்படுத்த கூறியுள்ளோம். 6 ஏரிகள், 30 குளங்கள் தூர்வாரப்பட உள்ளன. நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த இன்னும் தடுப்பணைகள் கட்ட உள்ளோம். பழைய வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

தற்போது கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்பு மூலம் நாளொன்றுக்கு 6 ஆயிரத்து 300 லிட்டர் நீரை சேகரிக்க முடியும். இதன்மூலம் தண்ணீர் வீணாவது தடுக்கப்படும்.

நிலத்தடி நீரானது 75 சதவீதம் விவசாயத்துக்கும், 10 சதவீதம் வீட்டு உபயோகத்துக்கும், 10 சதவீதம் தொழிற்சாலை பயன்பாட்டிற்கும், 5 சதவீதம் வேறு பயன்பாட்டிற்கும் உறிஞ்சப்படுகிறது.

துபாய், அபுதாபி போன்ற நாடுகளில் கடல்நீரை சுத்திகரித்து பயன்படுத்துகிறார்கள். புதுவையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் தொடர்பாக பிரெஞ்சு அரசிடம் பேசி வருகிறோம். அவர்கள் இசைவு தெரிவித்தால் தமிழகத்தைப்போல் இங்கும் நிறைவேற்றுவோம். வருகிற பட்ஜெட்டில் நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்கான திட்டங்களை அறிவிப்போம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com