

தடை
கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரை மற்றும் சுற்றுலா இடங்களுக்கு செல்ல கடந்த மார்ச் 23-ந் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பெருமளவு குறைந்து வரும் நிலையில் பொது ஊரடங்கில் அரசு பல கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது.
அதன்படி டிசம்பர்14-ந்தேதி முதல் அனைத்து சுற்றுலா இடங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதைத்தொடர்ந்து நேற்று சென்னை மெரினா உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் வழக்கம்போல் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் தனுஷ்கோடி கடற்கரை மற்றும் அரிச்சல்முனை சாலை பகுதிக்கு செல்ல தடை விலக்கப்பட வில்லை. ராமேசுவரம் கோவிலுக்கு வருகை தந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் தனுஷ்கோடி கடற்கரை செல்ல மிகுந்த ஆர்வத்துடன் சென்றனர்.
திருப்பி அனுப்பினர்
ஆனால் தனுஷ்கோடி செல்லும் சாலையான ராமேசுவரம் புதுரோடு சாலை பகுதியில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து சாலையின் குறுக்கே தடுப்பு கம்பிகளை அமைத்து தனுஷ்கோடிக்கு வந்த வாகனங்களை அனுமதி இல்லை எனக் கூறி திருப்பி அனுப்பி வைத்தனர். ஆனால் காவல்துறை மற்றும் அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அரசு அதிகாரிகளின் குடும்பத்தினர் வரும் அனைத்து வாகனங்களும் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை செல்ல அனுமதி அளிக்கப்பட்டதுடன், வெளி மாநிலங்களில் இருந்து வந்த வாகனங்களும் தனுஷ்கோடி செல்ல போலீசாரால் அனுமதி
அளிக்கப்பட்டது.
ஏமாற்றம்- அதிருப்தி
இது சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதுடன் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு நியாயம் அரசு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு ஒரு நியாயமா என்ற கேள்வி எழுந்தது. ஆகவே தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரைப் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவதுபோல் தனுஷ்கோடி கடற்கரை மற்றும் அரிச்சல்முனை சாலை வரையிலும் சுற்றுலாப் பயணிகள் சென்றுவர அரசின் உத்தரவை மாவட்ட நிர்வாகம் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும், சுற்றுலாப்பயணிகளை நம்பி வாழும் கார்,
ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகன ஓட்டுனர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.