தகுதிச்சான்று பெறாமல், பள்ளி வாகனங்களில் குழந்தைகளை ஏற்றினால் கடும் நடவடிக்கை - கலெக்டர் சுப்பிரமணியன் எச்சரிக்கை

தகுதிச்சான்று பெறாமல் பள்ளி வாகனங்களில் குழந்தைகளை ஏற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தகுதிச்சான்று பெறாமல், பள்ளி வாகனங்களில் குழந்தைகளை ஏற்றினால் கடும் நடவடிக்கை - கலெக்டர் சுப்பிரமணியன் எச்சரிக்கை
Published on

விழுப்புரம்,

கோடை விடுமுறை முடிந்துஅடுத்த மாதம்(ஜூன்) 3-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் தமிழ்நாடு மோட்டார் வாகன சிறப்பு விதிகளின்படி நிபந்தனைகள் சரியாக உள்ளதா? என்றும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையிலும் ஆண்டுதோறும் பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வகையில் மொத்தம் 1,083 வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்களில் தமிழ்நாடு மோட்டார் வாகன சிறப்பு விதிகளின்படி நிபந்தனைகள் சரியாக கடைபிடிக்கப்பட்டுள்ளதா? என்று வட்டார போக்குவரத்து அலுவலர்கள், காவல்துறையினர் கடந்த சில நாட்களாக ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விழுப்புரத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நேற்று நடைபெற்றது. இதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்த வாகனங்களை ஒவ்வொன்றாக மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாணவ-மாணவிகள் ஏறவும், இறங்குவதற்கும் ஒருவழி கதவு முறையாக பொருத்தப்பட்டுள்ளதா?, அவசரகால கதவு பொருத்தப்பட்டுள்ளதா?, வாகனங்களில் முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி உள்ளதா?, வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா?, பள்ளி வாகனங்களின் முன், பின் பகுதிகளில் பள்ளி வாகனம் என்றும், வாகனத்தின் இடதுபுறத்தில் பள்ளியின் பெயர், முகவரி, தொலைபேசி எண்ணும், வலதுபுறத்தில் பள்ளியின் பொறுப்பாளர் பெயர், சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம், இணையதள முகவரி, போலீஸ் நிலைய தொலைபேசி எண் ஆகியவை எழுதப்பட்டிருக்கிறதா? என்றும் கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள 210 தனியார் பள்ளிகளை சேர்ந்த 1,083 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 265 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்வதற்கான தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மற்ற பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த பணிகள் ஓரிரு நாட்களில் முடிவடையும். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு தகுதிச்சான்றிதழ் வழங்கப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்ல அனுமதி அளிக்கப்படும். தகுதிச்சான்று பெறாத வாகனங்களில் எந்த காரணத்தை கொண்டும் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லுதல் கூடாது. அதையும் மீறி குழந்தைகளை ஏற்றிச்செல்வது ஆய்வின்போது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுதவிர மாதந்தோறும் ஒவ்வொரு பள்ளி வாகனங்களையும் ஆய்வு செய்து போக்குவரத்து விதிப்படி முறையாக செயல்படுகிறதா? என்று கண்காணிக்க வட்டார போக்கு வரத்துத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆட்டோக்கள், வேன்களில் அதிகளவில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லுதல் கூடாது. அதையும் மீறி ஏற்றிச்சென்றால் சம்பந்தப்பட்ட ஆட்டோக்கள், வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது வட்டார போக்குவரத்து அலுவலர் பாலகுருநாதன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பெரியசாமி, கவிதா ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com