ஆபத்தை உணராமல் சோத்துப்பாறை அணை மதகில் சறுக்கி விளையாடும் இளைஞர்கள்

தேனி மாவட்டம், ஆபத்தை உணராமல் சோத்துப்பாறை அணை மதகில் சறுக்கி விளையாடும் இளைஞர்கள் சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரலாகிறது.
ஆபத்தை உணராமல் சோத்துப்பாறை அணை மதகில் சறுக்கி விளையாடும் இளைஞர்கள்
Published on

பெரியகுளம்,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 126.28 அடியாகும். நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 122.01 அடியாக உள்ளது. இந்த அணையில் உள்ள ஒரு மதகில் இருந்து நாள்தோறும் நகராட்சி குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 3 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த அணையின் மொத்த கொள்ளளவை எட்டினால் மதகுகள் மேற்பகுதி வழியாக தண்ணீர் மறுகால் பாயும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அணையின் முன்பகுதியில் கால்வாய்க்கு செல்லும் தண்ணீரில் குளித்து விட்டு செல்வார்கள். அணையின் மதகு பகுதிக்கு செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது. இந்நிலையில் அணை மதகின் மேல்பகுதியில் ஏறி குடிநீருக்கு திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரில் இளைஞர்கள் சிலர் ஆபத்தை உணராமல் சறுக்கி விளையாடும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. சோத்துப்பாறை அணையில் பாதுகாப்புக்கு ஊழியர்கள் இருந்தும் மதகு பகுதிக்கு செல்வதற்கு இளைஞர்கள் எப்படி அனுமதிக்கப்பட்டனர் என்பது புரியாத புதிராக உள்ளது. எனவே உயிர்பலி ஏற்படும் முன் இதுபோன்ற சாகசத்தில் இளைஞர்கள் ஈடுபடுவதை தடுக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com