கணவருடன் ஸ்கூட்டரில் வந்தபோது பெண்ணிடம் 6 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு

கணவருடன் ஸ்கூட்டரில் வந்த பெண்ணிடம் 6 பவுன் தாலிச்சங்கிலி பறித்து சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.
கணவருடன் ஸ்கூட்டரில் வந்தபோது பெண்ணிடம் 6 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு
Published on

திருச்சி,

திருச்சி அருகே உள்ள சோமரசம்பேட்டையை சேர்ந்தவர் சுகுமார். இவரது மனைவி உமா(வயது55). கணவன், மனைவி இருவரும் திருச்சி ஜங்சன் ரெயில் நிலையம் செல்வதற்காக நேற்று முன் தினம் அதிகாலை 5.30 மணிக்கு வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தனர். கணவர் சுகுமார் ஸ்கூட்டர் ஓட்ட, பின்னால் உமா அமர்ந்திருந்தார்.

திருச்சி தலைமை தபால் நிலையம் ஆஞ்சநேயர் கோவில் அருகே ரவுண்டானாவை கடக்க முயன்றனர். அப்போது அவர்களை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி ஒரு ஆசாமி வந்தான்.

6 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு

அவன், கண் இமைக்கும் நேரத்தில் உமா கழுத்தில் கிடந்த 6 பவுன் தாலிச்சங்கிலியை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் மறைந்தான். அதிகாலைநேரம் என்பதால், அந்த பகுதியில் அதிக அளவில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. இதனால் அந்த தம்பதி, திருடன், திருடன் என கூக்குரல் போட்டும் எவ்வித பயனும் இல்லை. பறிபோன நகையின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

இது குறித்து திருச்சி கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசில் உமா கொடுத்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே போலீசாரால் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் வழிப்பறி ஆசாமியின் உருவம் பதிவாகி உள்ளதா? எனவும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

வழிப்பறி முயற்சி

திருச்சி கலெக்டர் அலுவலக ரோட்டில் உள்ள மாரீஸ் அவின்யூவை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி அமுதவல்லி(46). இவர் தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் லாசன் சாலையில் உள்ள அய்யப்பன் கோவில் அருகே நேற்று முன் தினம் இரவு 9 மணிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர்களை பின் தொடர்ந்து வந்த மோட்டார் சைக்கிள் ஆசாமி ஒருவன், அமுதவல்லி கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றான். அப்போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் இருந்து அமுதவல்லி தவறி சாலையில் விழுந்து காயம் அடைந்தார். நகை திருடனின் கையில் இருந்து நழுவியதால் தப்பியது. திருடன் தலைமறைவானான். காயம் அடைந்த அமுதவல்லி அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com