கபிஸ்தலம் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை: வரதட்சணை கொடுமை காரணமா? உதவி கலெக்டர் விசாரணை

கபிஸ்தலம் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய தற்கொலைக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது பற்றி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
கபிஸ்தலம் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை: வரதட்சணை கொடுமை காரணமா? உதவி கலெக்டர் விசாரணை
Published on

கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் கபிஸ் தலம் அருகே உள்ள வட சருக்கை வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி அனுசுயா (வயது22). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆகின்றன. ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மணிகண்டன்-அனுசுயா இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மன வேதனை அடைந்த அனுசுயா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராகவன், வேம்பு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அனுசுயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அனுசுயாவின் தாயார் சாந்தலட்சுமி கபிஸ் தலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அனுசுயாவுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் அவருடைய தற்கொலைக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது பற்றி கும்பகோணம் உதவி கலெக்டர் வீராசாமி விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com