பெண்ணுக்கு தொல்லை கொடுத்ததால் கொலை: சேலத்தை சேர்ந்த நிதி நிறுவன அதிகாரியை வெட்டிக்கொன்ற 4 பேர் பிடிபட்டனர்

பெண்ணுக்கு தொல்லை கொடுத்ததால் சேலத்தை சேர்ந்த நிதி நிறுவன அதிகாரியை வெட்டிக்கொலை செய்ததாக பிடிபட்ட 4 பேர் வாக்குமூலம் அளித்து உள்ளனர்.
பெண்ணுக்கு தொல்லை கொடுத்ததால் கொலை: சேலத்தை சேர்ந்த நிதி நிறுவன அதிகாரியை வெட்டிக்கொன்ற 4 பேர் பிடிபட்டனர்
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நாய்க்கன்காடு பகுதியில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று உள்ளது. இங்கு சேலம் மாவட்டம் கிச்சிபாளையம் அப்பர் வீதியை சேர்ந்த சிவக்குமார் என்பவருடைய மகன் சண்முகம் (வயது 25) களப்பணி அதிகாரியாக வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல சண்முகம், நிதி நிறுவனத்தில் சக ஊழியரான பிரசன்னா(28) என்பவருடன் அமர்ந்து வரவு செலவு கணக்குகளை பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் சண்முகத்துடன் தகராறு செய்தனர். அதில் வாக்குவாதம் ஏற்பட்டது.

வெட்டிக்கொலை

உடனடியாக அவர்கள் சண்முகத்தை தாக்கத்தொடங்கினார்கள். அவர்களிடம் இருந்து தப்பித்துக்கொள்ள சண்முகம் வெளியே ஓடினார். ஆனால் 4 பேரும் அவரை தடுத்து கத்தியால் சரமாரியாக வெட்டினார்கள். அதில் சண்முகம் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அவர் நிதி நிறுவன அலுவலகத்தின் மாடிப்படியிலேயே விழுந்து துடி துடித்து பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது, யாராவது அருகில் வந்தால் வெட்டிக்கொலை செய்து விடுவதாக மிரட்டிய அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் என்.சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் கே.பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அலுவலக பணியாளரான பிரசன்னா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடினார்கள்.

4 பேர் பிடிபட்டனர்

கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் என்.சோமசுந்தரம் தலைமையில் தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் சண்முகத்தை வெட்டிக்கொலை செய்த 4 பேர் நேற்று பிடிபட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது அவர்கள் சேலம் மாவட்டம் கிச்சிபாளையம் அப்பர் வீதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவருடைய மகன் கார்த்திகேயன் என்கிற கார்த்தி (28), கிச்சிபாளையம் மாரியம்மன்கோவில் வீதி அண்ணாதுரை என்பவருடைய மகன் சபரி சித்தார்(23), சேலம் புத்துமாரியம்மன் கோவில் வீதி செங்கல்அணை ரோடு பகுதியை சேர்ந்த முத்துச்சாமி என்பவருடைய மகன் வேலவன் (37) மற்றும் ஈரோட்ட சேர்ந்த ஆட்டோ டிரைவர் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

மனைவிக்கு தொல்லை

இதுகுறித்து கார்த்திகேயன் அளித்து உள்ள வாக்குமூலத்தின் விவரம் வருமாறு:-

கார்த்திகயேன் சேலம் குகை பகுதியில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவன மேலாளராக வேலை பார்த்து வந்தார். கார்த்திகேயனும், சண்முகமும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் நண்பர்களாக இருந்தனர். சண்முகம் ஊருக்கு செல்லும்போதெல்லாம் கார்த்திகேயன் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் கார்த்திகேயனின் மனைவியுடனும் சண்முகத்துக்கு பழக்கம் ஏற்பட்டது. மனைவியின் செல்போன் எண் நண்பர் என்ற வகையில் சண்முகத்திடமும் இருந்தது. சண்முகம் செல்போனிலும் கார்த்திகேயனின் மனைவியுடன் அடிக்கடி பேசி வந்திருக்கிறார். அப்போது அவருக்கு தொந்தரவு கொடுத்து தொல்லை செய்யும் வகையில் சண்முகம் பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து கார்த்திகேயனிடம் அவரது மனைவி கூறினார். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர், சண்முகத்தை அழைத்து எச்சரிக்கை விடுத்தார். அப்போது இனிமேல் அதுபோல் எதுவும் செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டு சண்முகம் வந்து விட்டார்.

வெட்டினார்கள்

ஆனால், அவர் கார்த்திகேயன் மீது கடுமையான கோபத்தில் இருந்ததாக தெரிகிறது. எனவே கார்த்திகேயனை கொலை செய்ய சண்முகம் திட்டமிட்டதாக கார்த்திகேயனுக்கு தகவல்கள் கிடைத்தன. அவருக்கு முன்பு தான் முந்திவிட வேண்டும் என்று நினைத்த கார்த்திகேயன் அவரது நண்பர்களிடம் இதுபற்றி கூறினார். அவர்களும் ஒத்துழைப்பு தருவதாக கூறியதால் நேற்று முன்தினம் இரவு 4 பேரும் கோபிக்கு சென்றனர். அங்கு சண்முகத்தை கொலை செய்யும் நோக்கத்தில் நிதி நிறுவனத்துக்கு சென்று பேசினார்கள். அப்போது, கார்த்திகேயன், எனது மனைவியை போனிலும், நேரிலும் தொல்லை செய்வதை விடமாட்டாயாடா என்று கோபத்தில் சத்தமிட்டார். அதற்கு சண்முகம், நான் இனிமேல் எதுவும் செய்ய மாட்டேன் என்று பதில் கூறினார். ஆனால் ஆத்திரம் அடங்காத கார்த்திகேயன், என்னையும் கொலை செய்ய பார்த்தாயா... நீ உயிருடன் இருந்தால் தானே என்னை கொல்வாய். உன்னை உயிருடன் விட்டால்தானே என்னை கொல்லப்பார்ப்பாய் என்றுகூறியபடி கையில் கொண்டு வந்திருந்த கத்தியால் ஓங்கி வெட்டினார். அதை தடுக்க முடியாமல் சண்முகம் தப்பி அலுவலகத்தில் இருந்து வெளியே ஓடியபோது கார்த்திகேயனும் உடன் வந்த 3 பேரும் சேர்ந்து சரமாரியாக வெட்டி கொலை செய்தனர் என்ற விவரத்தை வாக்குமூலத்தில் தெரிவித்தனர்.

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பிடிபட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கூறப்பட்ட விவரங்கள் சரியானவையா?. இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் கொலைக்கு வேறு காரணங்கள் உள்ளனவா?. நிதி நிறுவனங்கள் தொடர்பான பிரச்சினை உள்ளதா? என்ற கோணங்களில் தொடர் விசாரணை நடந்து வருகிறது. பிடிபட்ட 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com