

கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் பூஞ்சோலை(வயது 55). இவருடைய மனைவி கற்பகம்(50). இவர்கள் இருவரும் தையல் வேலை செய்து வந்தனர். நேற்று கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் புழல் அடுத்த விநாயகபுரத்தில் உள்ள உறவினரை பார்க்க வந்தனர். புழல் சிறை அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, இவர்களது மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த கற்பகம், கணவர் பூஞ்சோலையின் கண் எதிரேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.