செங்குன்றத்தில் வங்கி கணக்கில் ரூ.21 ஆயிரம் கள்ளநோட்டுகள் செலுத்திய பெண்ணால் பரபரப்பு

செங்குன்றத்தில் வங்கி கணக்கில் ரூ.21 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 200 ரூபாய் கள்ளநோட்டுகளை டெபாசிட் செய்த பெண்ணிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளநோட்டுகள்
கள்ளநோட்டுகள்
Published on

பருப்பு கம்பெனி

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி(வயது 28). இவர், செங்குன்றத்தை அடுத்த எடப்பாளையம் பகுதியில் சொந்தமாக பருப்பு கம்பெனி நடத்தி வருகிறார்.

இவர், கம்பெனியில் பருப்பு விற்பனை செய்ததில் கிடைத்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை நேற்று செங்குன்றத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் தனது வங்கி கணக்கில் டெபாசிட் செய்தார்.

ரூ.21 ஆயிரம் கள்ளநோட்டுகள்

அவர் சென்ற பிறகு அந்த பணத்தை வங்கி ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அதில் ரூ.21 ஆயிரம் மதிப்புள்ள 200 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் கள்ளநோட்டுகள் என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக வங்கி தரப்பில் செங்குன்றம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார், வங்கியில் பணம் டெபாசிட் செய்த விஜயலட்சுமிடம் விசாரித்து வருகின்றனர்.

பெண்ணிடம் விசாரணை

பருப்பு கம்பெனி நடத்தி வரும் விஜயலட்சுமி, பருப்பு விற்றதற்காக வியாபாரிகளிடம் இருந்து வாங்கிய பணத்தில் கள்ளநோட்டுகள் இருப்பதை கவனிக்காமல் வங்கியில் செலுத்தினாரா? அல்லது அவரே கள்ளநோட்டுகள் என தெரிந்தும் வங்கியில் மாற்ற முயன்றாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வங்கியில் டெபாசிட் செலுத்திய பணத்தில் ரூ.21 ஆயிரம் கள்ளநோட்டுகள் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com