

கரூர்,
கரூர் அருகே உள்ள சணப்பிரட்டியில் இயங்கி வந்த அரசு மதுபானக்கடை கோர்ட்டு உத்தரவுப்பட்டி மூடப்பட்டது. இந்த நிலையில் நேற்று மூடப்பட்ட மதுபான கடையின் அருகே தனிநபர் ஒருவர் கடை அமைத்து அதில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்து கொண்டு இருந்தார். இதனை அறிந்த அப்பகுதி பெண்கள் அந்த கடைக்கு சென்று அங்கு வைக்கப்பட்டு இருந்த பொருட்கள், மதுபான பாட்டில்களை எடுத்து சாலையில் போட்டு அடித்து நொறுக்கினர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட தனிநபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பசுபதிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கூறுகையில், சட்ட விரோதமாக மதுபானக்கடை அமைத்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பெண்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து தலைமறைவான அந்த தனிநபர் குறித்து பசுபதிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.