

இளம்பிள்ளை:-
இளம்பிள்ளை அருகே தப்பக்குட்டை ஊராட்சிக்கு உட்பட்ட காளிகவுண்டனூர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இந்த பகுதிக்கு கடந்த 2 வாரங்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, நேற்று காலையில் இளம்பிள்ளையில் இருந்து கச்சுப்பள்ளி செல்லும் ரோட்டில் காளி கவுண்டனூர் பகுதியில் அந்த பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த மகுடஞ்சாவடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், மகுடஞ்சாவடி வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சீராக குடிநீர் வினியோகம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.