

பூந்தமல்லி,
மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம், மெட்ரோ நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அழகர்சாமி என்பவர் சொந்தமாக நிறுவனம் நடத்தி வருகிறார். அங்கு சங்கர், சதாம் உசேன் ஆகிய 2 பேர் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு சாப்பிடுவதற்காக அலுவலகத்தை பூட்டி விட்டு இருவரும் ஓட்டலுக்கு சென்று விட்டனர்.
சிறிது நேரத்தில் அந்த வீட்டின் வளாகத்தில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிவதாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். இருவரும் அங்கு வந்து பார்த்தபோது சங்கரின் மோட்டார் சைக்கிள் முழுவதும் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அருகில் நிறுத்தி இருந்த சதாம் உசேனின் வாகனம் லேசான சேதம் ஏற்பட்டது. தீயை அவர்களே அணைத்தனர். இதில் சங்கரின் மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமானது.
இது குறித்த புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, நள்ளிரவு நேரத்தில் மொபட்டில் முகத்தை துணியால் மூடியபடி வரும் 2 பெண்கள் அந்த வீட்டின் முன்பு மொபட்டை நிறுத்துகிறார்கள். ஒருவர் மட்டும் இறங்கி உள்ளே சென்று அந்த வாகனத்தை தீவைத்து கொளுத்திவிட்டு வருகிறார்.
அதன்பிறகு இருவரும் அங்கிருந்து தப்பிச்செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. எனவே தீ வைத்து கொளுத்திய 2 பெண்கள் யார்?. எதற்காக தீவைத்தார்கள்? என்பது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.