பெண்கள் உயர்கல்வி படிக்க முன்வர வேண்டும்; வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் பேச்சு

பெண்கள் உயர்கல்வி படிக்க முன்வர வேண்டும் என்று கணியம்பாடியில் நடந்த நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு விழாவில் வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் பேசினார்.
பெண்கள் உயர்கல்வி படிக்க முன்வர வேண்டும்; வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் பேச்சு
Published on

வேலூர்,

வி.ஐ.டி. நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் 17-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடந்தது. இதன் நிறைவு விழா கணியம்பாடி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

விழாவுக்கு வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பல்வேறு பள்ளிகளுக்கு கணினி, நோட்டு மற்றும் எழுதுகோல் ஆகியவற்றை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

வேலூர் மாவட்டம் விவசாயத்தை நம்பி இருக்கின்ற மாவட்டம். விவசாயிகளுக்கு என்னென்ன பிரச்சினைகள் இருக்கிறது என்று மாணவர்கள் இங்கு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். நிலத்தடி நீர் சுமார் 20 அடி கீழே சென்று உள்ளது. விவசாய வேலைக்கு போதிய ஆட்கள் கிடைப்பதில்லை.

மாநிலங்களுக்கு இடையே ஆறுகளை இணைப்பதற்கு எந்தவித தடையும் கிடையாது. நமது மாவட்டத்தில் சுமார் 1,200 ஏரிகள் உள்ளன. மழைக்காலங்களில் மழை நீரை நாம் இந்த ஏரிகளில் சேமித்து வைத்தாலே போதுமான அளவிற்கு நிலத்தடி நீர் உயர்ந்து விடும்.

கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் முதல் இடம்பிடிப்பவர்களுக்கு வி.ஐ.டி. தங்கப்பதக்கம் வழங்கும். மாணவ- மாணவிகள் 10, 12-ம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விடாமல் பட்டப் படிப்பையாவது முடிக்க வேண்டும். குறிப்பாக பெண்கள் உயர்கல்வி படிக்க முன் வரவேண்டும். இதற்கு அனைவருக்கும் உயர்கல்வி திட்டம் உதவி புரியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ஈஸ்வரப்பன் ஆகியோரும் கலந்துகொண்டு பேசினர். முன்னதாக பேராசிரியர் மோகனா சீனிவாசன் வரவேற்றார். நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயகிருஷ்ணன் முகாம் குறித்து விளக்கிக் கூறினார். முடிவில் பேராசிரியை காயத்ரி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com