விடுதிக்கு ‘சீல்’ வைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உள்ளிருப்பு போராட்டம்

விடுதிக்கு ‘சீல்’ வைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அதிகாரிகள் 10 நாள் காலஅவகாசம் அளித்து சென்றனர்.
விடுதிக்கு ‘சீல்’ வைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உள்ளிருப்பு போராட்டம்
Published on

ஆலந்தூர்,

சென்னை வேளச்சேரி டான்சி நகரில் தனியார் பெண்கள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி உள்ளனர். இந்த கட்டிடத்தின் உரிமையாளர் சேகர் மாணிக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் வருவாய் கோட்டாச்சியர் மற்றும் அதிகாரிகள் கடந்த 2-ந்தேதி இந்த விடுதியில் சோதனை செய்தனர்.

அப்போது முறையான ஆவணங்கள் இன்றியும், விதிமுறைகளை கடைபிடிக்காமலும், அறைகள் நெருக்கமாக அமைந்திருப்பதாகவும், பாதுகாப்பு மற்றும் சுகாதாரமின்றி விடுதியை நடத்தி வருவதாலும் விடுதிக்கு சீல் வைக்க உள்ளதாக அறிவிப்பு நோட்டீசை அளித்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

பெண்கள் உள்ளிருப்பு போராட்டம்

இந்த நிலையில் நேற்று விடுதிக்கு சீல் வைப்பதற்காக சென்னை மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் வந்தனர். இதற்கு விடுதியில் இருந்த 58 பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனடியாக எங்களை காலி செய்ய சொன்னால் எங்கு செல்வது?. எங்களுக்கு கால அவகாசம் தரவேண்டும் என்று கூறி விடுதிக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு அதிகாரிகள், உங்களுக்கு அரசு சார்பில் தற்காலிமாக இடம் அளிப்பதாக தெரிவித்தனர். ஆனால் அதை ஏற்க மறுத்த பெண்கள், விடுதிக்கு சீல் வைக்க கூடாது. எங்களுக்கு கால அவகாசம் தந்தால் நாங்களே காலி செய்து கொள்கிறோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

10 நாள் அவகாசம்

இது பற்றி மாவட்ட கலெக்டருக்கு தகவல் தரப்பட்டது. சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து 10 நாள் கால அவகாசம் அளிப்பதாகவும், அதற்குள் விடுதியில் இருந்து காலி செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதை ஏற்று பெண்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டனர். அதிகாரிகளும் பெண்கள் விடுதிக்கு சீல் வைக்காமல் திரும்பிச்சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com