

காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ளது வேலம்பட்டி கிராமம். இங்குள்ள எம்.ஜி.ஆர். நகரில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் குடிநீருக்காக பல மைல் தூரம் சென்று குடிநீர் எடுத்து வரவேண்டிய நிலை இருந்து வந்தது. இதனால் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு புதிதாக போர் போடப்பட்டு தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது.
ஆனால் இதுநாள் வரையிலும் அந்த தண்ணீர் தொட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. இது தொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாத அந்த தண்ணீர் தொட்டிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி ஒப்பாரி வைத்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் உடனடியாக தண்ணீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.