

ஆலந்தூர்,
சென்னையை அடுத்த நீலாங்கரை, கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்கம் போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் கடற்கரை பகுதியில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் மர்ம ஆசாமி ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டு விட்டு, மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விடுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து அடையாறு போலீஸ் துணை கமிஷனர் சுந்தரவடிவேலு உத்தரவின்பேரில் நீலாங்கரை போலீஸ் உதவி கமிஷனர் பாண்டியன் தலைமையில் நீலாங்கரை போலீசார் மாறுவேடத்தில் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது
அப்போது நீலாங்கரை பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் வாலிபர் ஒருவர் தனியாக நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபட்டு விட்டு தனது மோட்டார் சைக்கிளில் தப்பிச்செல்வதை கண்டனர். உடனே போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர், கோவையை சேர்ந்த யஸ்வந்த் அருள்(வயது 25) என்பதும், கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், கொட்டிவாக்கத்தில் தங்கி, பெருங்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதும் தெரிந்தது.
இவர், தொடர்ந்து இதேபோல் தனியாக நடந்து சென்ற பல பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதையடுத்து கம்ப்யூட்டர் என்ஜினீயரான யஸ்வந்த் அருளை போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.