மாநில வளர்ச்சி திட்டங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்; வங்கிகளுக்கு நிதி அமைச்சக அதிகாரி வேண்டுகோள்

மாநில வளர்ச்சி திட்டங்களுடன் இணைந்து வங்கிகள் செயல்பட வேண்டும் என்று நிதி அமைச்சக அதிகாரி வேண்டுகோள் விடுத்தார்.
மாநில வளர்ச்சி திட்டங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்; வங்கிகளுக்கு நிதி அமைச்சக அதிகாரி வேண்டுகோள்
Published on

புதுச்சேரி,

புதுவை மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் சார்பில் பொதுத்துறை வங்கிகளுக்கான 2-ம் நிலை கலந்தாய்வு மற்றும் கருத்து அறியும் கூட்டம் அக்கார்டு ஓட்டலில் நடந்தது. கூட்டத்துக்கு இந்தியன் வங்கியின் மேலாண் இயக்குனர் பத்மஜா சந்துரு தலைமை தாங்கினார். கூட்டத்தில் 18 பொதுத்துறை வங்கிகளை சேர்ந்த முதன்மை தலைமை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் புதுவை அரசின் வளர்ச்சி ஆணையர் அன்பரசு கலந்துகொண்டு முக்கிய செயல்பாட்டு வழிவகைகளை வழங்கினார். மத்திய அரசின் நிதித்துறை அமைச்சகத்தின் நிதிசேவை துறையின் துணை இயக்குனர் அஞ்சா துபே பேசும்போது, வங்கிகள் தேசிய முன்னுரிமைகளை மனதில் கொண்டு செயல்பட வேண்டும், அதே நேரத்தில் மாநில அளவிலான வளர்ச்சி திட்டங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த கலந்தாய்வு முக்கிய செயல்பாட்டு வழி நெறிகள் அனைத்தும் பொதுத்துறை வங்கிகளும், அரசுத்துறை அதிகாரிகளும் இணைந்து தயாரித்து அதன் அடிப்படையில் நடந்தது. வங்கிகள் கடன் வழங்கும் திட்டங்கள் பற்றியும், சிறுகுறு கடன், ஸ்டேண்ட் அப் இந்தியா, முத்ரா, நிமிட கடன், வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த கடன், சிறு தொழில்கடன், வியாபார கடன், நிதிசார் சேவை, பணம் இல்லா பரிவர்த்தனை போன்ற பல்வேறு வங்கி திட்டங்கள் குறித்தும் சிறப்பாக பொதுமக்களுக்கு சேவை வழங்க புதிய மாற்று கருத்துகள் பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்தியன் வங்கியின் களபொது மேலாளர் சந்திராரெட்டி, மண்டல மேலாளர் வீரராகவன் ஆகியோர் இந்த கூட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தினார்கள். அனைத்து பொதுத்துறை வங்கிகளை சேர்ந்த வங்கியாளர்களும், புதுவை மாநில அரசு உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டு கருத்துகளை பரிமாறினார்கள். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com