

மோகனூர்,
நாமக்கல் அருகே உள்ள குட்லாம்பாறை, வகுரம்பட்டி, பெரமாண்டம்பாளையம் மற்றும் லத்துவாடி பகுதிகளில் செயல்பட்டு வரும் கோழிப்பண்ணைகளில் வடமாநிலத்தை சேர்ந்த குழந்தை தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் மெகராஜூக்கு புகார் வந்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் நாமக்கல் உதவி கலெக்டர் கோட்டைகுமார் தலைமையில் தாசில்தார்கள் பச்சைமுத்து, ராஜேஸ் கண்ணா ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று சம்பந்தப்பட்ட கோழிப்பண்ணைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது பெரமாண்டம்பாளையத்தில் 3 சிறுவர்கள், குட்லாம்பாறையில் 7 சிறுமிகள், லத்துவாடியில் 13 சிறுமிகள், வகுரம்பட்டியில் 12 சிறுமிகள் என மொத்தம் 35 சிறுவர், சிறுமிகள் மீட்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்கள் அனைவரையும் நாமக்கல் அழைத்து வந்த அதிகாரிகள் நகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைத்து உள்ளனர். அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில் இவர்களுக்கு பேசியபடி ஊதியம் வழங்கப்படவில்லை என்பதும், தங்கும் இடத்தில் போதிய அடிப்படை வசதி செய்யவில்லை என்பதும் தெரியவந்து இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பள தொகை முழுமையாக கிடைக்கவும், அவர்களை பாதுகாப்பாக சத்தீஷ்கார் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சிறுவர், சிறுமிகளின் வயதை ஆய்வு செய்து வரும் அதிகாரிகள், குழந்தை தொழிலாளர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களை பணிக்கு அமர்த்திய கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். அவர்கள் கொத்தடிமைகள் போல நடத்தப்பட்டார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.