தர்மபுரி அருகே பயங்கரம் வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை தலைமறைவான நண்பருக்கு போலீசார் வலைவீச்சு

தர்மபுரி அருகே வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடன் பணிபுரிந்த நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தர்மபுரி அருகே பயங்கரம் வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை தலைமறைவான நண்பருக்கு போலீசார் வலைவீச்சு
Published on

தர்மபுரி:

தர்மபுரி அருகே வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடன் பணிபுரிந்த நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

வடமாநில தொழிலாளி

தர்மபுரி அருகே குண்டல்பட்டி பகுதியில் தனியார் கிரானைட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த பாபாய் (வயது 20) உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். பாபாய்க்கும், அவருடைய நண்பரான ஆதித்யா சவுத்ரி (34) என்பவருக்கும் நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர்கள் 2 பேரையும் அங்கிருந்து வெளியேறுமாறு நிர்வாகத்தினர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் பணிக்கு வந்தனர். அப்போது நிறுவன வளாகத்தில் உள்ள சுற்றுச்சுவர் அருகே தலையில் காயங்களுடன் பாபாய் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் மதி கோன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அடித்துக்கொலை

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பாபாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அங்கு பணிபுரியும் தொழிலாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது பாபாய் உடன் தகராறில் ஈடுபட்ட ஆதித்யா சவுத்ரி அங்கிருந்து தலைமறைவாகியது தெரியவந்தது. இந்த கொலை சம்பவத்தில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவான ஆதித்யா சவுத்ரியை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com