

உத்தமபாளையம்:
சின்னமனூர் அருகே தொழிலாளியை அடித்துக்கொலை செய்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மின் இணைப்பு துண்டிப்பு
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள வெள்ளையம்மாள்புரம் ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 40). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஜெயா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கடந்த 13-ந்தேதி வெள்ளையம்மாள்புரத்தில் கோவில் திருவிழாவையொட்டி நடந்த ஆடல்-பாடல் நிகழ்ச்சியை பார்ப்பதற்காக சந்திரசேகர் சென்றார். நிகழ்ச்சி முடிந்தவுடன் அவர் தனது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது அதே ஊரை சேர்ந்த நேதாஜி (26), அஜித்குமார் (24), ஈஸ்வரன் (24) ஆகிய 3 பேரும், சந்திரசேகரின் வீட்டின் அருகில் கோவில் திருவிழாவையொட்டி அமைக்கப்பட்டிருந்த மின்சார பல்புகளை தட்டி விட்டுள்ளனர். இதனால் சந்திரசேகர் வீட்டுக்கு சென்ற மின் இணைப்பு பழுதாகி, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனை பார்த்த சந்திரசேகர், அந்த வாலிபர்களை தட்டிக்கேட்டார்.
3 வாலிபர்கள் கைது
இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சந்திரசேகரை சரமாரியாக தாக்கினர். மேலும் அவரை தரையில் தள்ளிவிட்டனர். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் 3 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதற்கிடையே படுகாயம் அடைந்த சந்திரசேகரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் ஓடைப்பட்டி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து நேதாஜி உள்பட 3 வாலிபர்களை தேடி வந்தனர்.
இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்திரசேகர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கை, கொலை வழக்காக போலீசார் பதிவு செய்தனர். மேலும் வெள்ளையம்மாள்புரத்தில் பதுங்கியிருந்த நேதாஜி, அஜித்குமார், ஈஸ்வரன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.