தஞ்சை பூக்கார தெருவில் ஆக்கிரமிப்பை அகற்ற தொழிலாளர்கள் எதிர்ப்பு

தஞ்சை பூக்கார தெருவில் ஆக்கிரமிப்பை அகற்ற தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் எம்.எல்.ஏ. நீலமேகத்தின் கோரிக்கையை ஏற்று அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
தஞ்சை பூக்கார தெருவில் ஆக்கிரமிப்பை அகற்ற தொழிலாளர்கள் எதிர்ப்பு
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை பூக்கார தெருவில் பூச்சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு வெளியே சாலையின் இருபுறமும் பூக்கடைகள் உள்ளன. இதனால் பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். பூக்கள் வாங்க இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் சாலையோரத்தில் நிறுத்திவிட்டு செல்வதால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திற்கு பலர் கோரிக்கை வைத்த னர். இந்த கோரிக்கையை ஏற்று ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி ஆணையர் ஜானகிரவீந்திரன் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன், உதவி பொறியாளர் மகேந்திரன், இளநிலை பொறியாளர் ஆறுமுகம் மற்றும் ஊழியர்கள் நேற்று பூக்கார தெருவுக்கு சென்றனர்.

எதிர்ப்பு

பாதுகாப்பு பணிக்காக தெற்கு போலீசாரும் வரவழைக்கப்பட்டிருந்தனர். சாலையோரம் பூக்கடைக்காக போடப்பட்டிருந்த தென்னை ஓலையால் ஆன கொட்டகையை ஊழியர்கள் அகற்றி, லாரியில் ஏற்றினர். இதை பார்த்த பூக்கடை தொழிலாளர்கள் ஒன்று திரண்டு வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற கூடாது என கூறி அதிகாரிகளிடம் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு அகற்ற வேண்டிய கடமை உள்ளது என கூறிய அதிகாரிகளின் கருத்தை தொழிலாளர்கள் ஏற்று கொள்ளாததுடன் ஆக்கிரமிப்பை அகற்ற அனுமதிக்கவில்லை. இதை அறிந்த நீலமேகம் எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தை

அப்போது அவர், மழை காலமாக இருப்பதால் ஆக்கிரமிப்பை அகற்றினால் பூக்கடை தொழிலாளர்கள் எங்கே செல்வார்கள். ஆதலால் இப்போது இந்த முயற்சியை கைவிட்டு திரும்பி செல்லுங்கள் என்றார். எந்த தேதியில் ஆக்கிரமிப்பை அகற்றலாம் என தொழிலாளர்கள் எழுதி கொடுத்தால் நன்றாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்வோம். அதுவரை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டாம் என எம்.எல்.ஏ. கேட்டு கொண்டதால் ஆக்கிரமிப்பை தொடர்ந்து அகற்றாமல் அதிகாரிகளும், ஊழியர்களும் திரும்பி சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com