உத்தண்டியில் உலக வங்கி அதிகாரி வீட்டில் ரூ.25 லட்சம் தங்கம், வைர நகைகள் கொள்ளை

உத்தண்டியில், உலக வங்கி அதிகாரி வீட்டில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
உத்தண்டியில் உலக வங்கி அதிகாரி வீட்டில் ரூ.25 லட்சம் தங்கம், வைர நகைகள் கொள்ளை
Published on

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள உத்தண்டி கிழக்கு கடற்கரை சாலையில் தனியார் குடியிருப்பு உள்ளது. இங்கு வடமாநிலத்தைச் சேர்ந்த சுனில்குமார்(வயது 51) என்பவர் தங்கி உள்ளார். இவர், தரமணியில் உள்ள உலக வங்கி அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

கடந்த 1-ந் தேதி சுனில்குமார், தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு ஐதராபாத்துக்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் இரவு ஐதராபாத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பி வந்தார்.

வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, சமையல் அறையில் உள்ள ஜன்னல் கண்ணாடி கழற்றி வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அறையில் இருந்த பீரோவை சோதனை செய்தபோது, அதில் வைத்து இருந்த ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் மற்றும் ரூ.80 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. சுனில்குமார், குடும்பத்துடன் ஐதராபாத் சென்று இருப்பதை அறிந்த கொள்ளையர்கள், சமையல் அறை ஜன்னல் கண்ணாடியை கழற்றி, அதன் வழியாக வீட்டுக்குள் புகுந்து கைவரிசையை காட்டி சென்று இருப்பது தெரிந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது வீட்டில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

மேலும் அந்த குடியிருப்பு பகுதியில் வேலை செய்யும் ஊழியர்களிடமும் சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com