உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி ஓசூரில் தொழில் கருத்தரங்கம் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தொடங்கி வைத்தார்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி ஓசூரில் தொழில் கருத்தரங்கை அமைச்சர் பால கிருஷ்ணரெட்டி தொடங்கி வைத்தார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி ஓசூரில் தொழில் கருத்தரங்கம் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தொடங்கி வைத்தார்
Published on

ஓசூர்,

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி ஓசூரில் தொழில் கருத்தரங்கு நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மாவட்ட தொழில் மைய மேலாளர் தேவராஜ் வரவேற்றார். தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக ஓசூர் கிளை மேலாளர் மோகன் திட்ட விளக்க உரையாற்றினார். இதில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி கலந்து கொண்டு, ரூ.1,400 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தொழில் முனைவோருக்கு வழங்கினார்.

அப்போது அமைச்சர் பேசியதாவது:-

குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் உள்ளிட்ட தொழில் துறையின் வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்திடும் வகையில் தமிழக அரசு, உலக முதலீட்டாளர்களின் மாநாடு-2019-ஐ வருகிற 23 மற்றும் 24-ந்தேதி சென்னையில் நடத்துகிறது. இதன் மூலம், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்களில் ரூ,32,120 கோடி வரை முதலீட்டை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முன்னோட்டமாக மாநிலம் முழுவதும் முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில், மாவட்ட அளவிலான கருத்தரங்கு கூட்டங்கள், அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படுகின்றன.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவாக்கிய முன்னோடி திட்டமான நீட்ஸ் திட்டத்தின் கீழ் அதிகபட்ச கடன் உச்சவரம்பு தற்போது ரூ.1 கோடியில் இருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பயனாளிகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத்தொகை ரூ.25 லட்சத்தில் இருந்து, ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில், தமிழக அரசின் 3 சுய வேலைவாய்ப்பு திட்டங்களின் மூலம் மானியத்துடன் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் மூலம் 969 பேருக்கு ரூ.19.60 கோடி முதலீட்டில் தொழில்கள் தொடங்க ரூ.4.90 கோடி அரசு மானியம் வழங்கப்பட்டுள்ளது.

உலக முதலீட்டாளர்கள் 2-வது மாநாட்டையொட்டி மாவட்டத்தில் சுமார் 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை மேற்கொள்வதற்கு, குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் முன்வர வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரையில், 438 தொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.1006.50 கோடி மதிப்பில் புதிய முதலீடுகள் கண்டறியப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வரும் உலக முதலீட்டாளர்கள் 2-வது மாநாட்டை பெரும் வெற்றியடைய செய்யும் வகையில், கடந்த மாநாட்டை விட குறைந்த பட்சம் இருமடங்கான முதலீடுகளை நமது மாநிலம் ஈர்க்க அனைத்து தொழில் முனைவோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில், ஓசூர் சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் சங்க தலைவர்(ஹோஸ்டியா) வேல்முருகன், முன்னாள் தலைவர்கள் ஞானசேகரன், பால கிருஷ்ணன், உதவி பொறியாளர் ராமமூர்த்தி, யசோதனன், சிப்காட் திட்ட அலுவலர் வெங்கடாசலம், இந்தியன் வங்கி முன்னோடி மேலாளர் பாஸ்கரன் மற்றும் தொழில் நிறுவனர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com