உலக சுற்றுலா தினம்: பயணிகள் வராததால் களையிழந்த புதுவை

கொரோனா வைரஸ் காரணமாக உலக சுற்றுலா தினமான நேற்று சுற்றுலா பயணிகள் வராததால் புதுவை களையிழந்து காணப்பட்டது.
உலக சுற்றுலா தினம்: பயணிகள் வராததால் களையிழந்த புதுவை
Published on

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. புதுவையில் உள்ள சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் இ-பாஸ் நடைமுறை கடைபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக புதுவைக்கு சுற்றுலா பயணிகள் யாரும் வரவில்லை. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி புதுவைக்கு வர இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையே பொதுப்போக்குவரத்து தொடங்கப்படாவிட்டாலும் தனிநபர் வாகன போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது. புதுவையின் சுற்றுலா இடங்களான கடற் கரை சாலை, பாரதி பூங்கா, நோணாங்குப்பம் படகு குழாம் ஆகியவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து புதுவைக்கு தற்போது சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கியுள்ளனர். ஆனால் அவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே வருகின்றனர். உலக சுற்றுலா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. வழக்கமாக உலக சுற்றுலா தினத்தின் போது சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக புதுவை அரசு சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு விதிமுறைகள் அமலில் இருப்பதால் சிறப்பு நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படவில்லை.

புதுவைக்கு நேற்று வந்த சுற்றுலா பயணிகள் சிலர் கடற்கரை சாலைக்கு சென்றனர். அங்கு தலைமை செயலகம் எதிரே உள்ள மணல் பரப்பில் கடலில் இறங்கி அலையில் கால்களை நனைத்து மகிழ்ந்தனர். சிலர் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடினர். இதே போல் நோணாங்குப்பத்தில் உள்ள படகு குழாமிற்கு குறைந்த எண்ணிக்கையிலேயே சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் அரசின் விதிமுறைகளை பின்பற்றி படகு சவாரி செய்தனர்.

வழக்கமாக வார இறுதி நாட்களில் புதுவை ஓட்டல் களில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பி வழியும். எங்கு பார்த்தாலும் வெளிமாநில பதிவெண் கொண்ட வாகனங் களை காண முடியும். ஆனால் இந்த ஆண்டு உலக சுற்றுலா தினமான நேற்று ஒரு சில சுற்றுலா பயணிகளே புதுவைக்கு வந்திருந்தனர். எந்த ஒரு கொண்டாட்டமும் இல்லாமல், சுற்றுலா பயணிகளின் வரத்தும் அதிகமாக இல்லாமல் புதுவை களையிழந்து காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com