

மும்பை,
மராட்டியத்தில் கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி எழுதிய கடிதத்தால் அவருக்கும், முதல்-மந்திரிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்தநிலையில் வழிபாட்டு தலங்களை மூடி வைத்திருக்கும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் முடிவுக்கு எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
கடிதம்
இந்த விவகாரத்தில் முதல்-மந்திரிக்கு ஆதரவு தெரிவித்து பிரபல மராத்தி எழுத்தாளர்கள் பால்சந்திரா நிமடே, ரங்கனாத் பதாரே மற்றும் சாந்தா கோகலே, மூடநம்பிக்கை ஒழிப்பு ஆர்வலர் முக்தா தபோல்கர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.
இந்திய அரசியலமைப்பின் 25-வது பிரிவு கூட மத பிரச்சினைகளில் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. மக்களின் நம்பிக்கையிலிருந்து அரசியல் பலன்களைப் பெறுவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டால் அது மக்களின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.